
(இந்த பதிவை ஏற்கனவே வேறு எங்கேனும் படித்த ஞாபகம் இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
நான் படித்த படைப்புகளின் பாதிப்புகள் ( !? ) இருக்கக்கூடும் .)
இருளானது தண்ணீரைப்போல் தனது இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடியது.
பால்யத்தின் மாலை நேர இருள் கூடி விளையாடவும் , மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது.பதின் பருவ , மின்சாரமில்லா முன்னிரவின் இருள் பயம் மிகுந்ததாக இருந்திருக்கிறது.அது கையில் ரேகை படர்ந்திருப்பதைப் போல பயத்தை ஊரங்கும் படரவிடக் கூடியது.கல்லூரிக் கால பின்னிரவுகளின் இருள் அரட்டைகளுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.
இருளானது சோகம், சந்தோசம், நட்பு, துரோகம், காதல், மோதல், அன்பு, ஆக்ரோஷம் அனைத்தையும் இரட்டிப்பாகக் கூடியது. இருள், உணவுகளின் சுவையை மாற்றக் கூடியது, மனிதர்களையும் கூடத்தான் இல்லையா?
மாநகர வாழ்க்கையின் எமெர்ஜென்சி விளக்குகளில் நாம் இருளை இழந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய மாநகர குழந்தைகள் இருளுக்கும் இயற்கைக்கும் அந்நியர்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு படைப்பில் படித்துதான் ஞாபகம் வருகிறது .
ஒரு மாநகர் வாழ் குழந்தை கழுதை - யையே நேரில் பார்த்ததில்லை என்றும் அதனை பார்ப்பதற்காக அந்த குழந்தையும் அதன் தந்தையும் வெகு தூரம் தேடி அலைவதாகவும் நீள்கிறது அந்த கதை.
ஆம், நம்மில் எத்தனை பேர் சென்னையில் கழுதைகளை (நான் சொல்வது நான்கு கால் கழுதைகளை ) பார்த்திருக்கிறோம்?