
இன்று அடையாறு கணபதிராம் தியேட்டரில் ' ருத்ரம் ' படம் பார்க்க போயிருந்தேன். ரெண்டே முக்கா மணி ஷோவுக்கு , ஒண்ணே முக்காவுக்கே போயாச்சு . படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் ஆகியும் கூட்டம் கொறஞ்சபாடில்ல. ஆனாலும், ' நாமதான் சீக்கிரம் போய்ட்டோமே ' ன்னு நாப்பது ரூபா கியூவில நின்னேன். (பால்கனி டிக்கெட் ஐம்பது ரூபா) . கடைசியில நாற்பது ரூபா டிக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாக்கு குடுத்தாங்க. அதிலயும் அஞ்சு ரூபா மீதி சில்லறை இல்லன்டானுங்க.
நானெல்லாம் பஸ்ல ஐம்பது காசு மீதி குடுக்கலன்னாவே , கண்டக்டர்கிட்ட கேட்டு வாங்கற ஆளு. ஆனா இங்க என்னடான்னா , அஞ்சு ரூபாவ ஆட்டயப் போட்ட ஒடனே எனக்குள்ள இருக்குற ' அந்நியன் ' , முழிச்சுக்கப் பார்த்தான். ஆனா, படம் போட்டாச்சுனு தெரிஞ்சதும் , அந்நியன் சகிதமா, அமைதியா , உள்ள என்டர்ஆயாச்சு.
சரி இந்த கதைய விடுங்க. நம்ம , ' ருத்ரம் ' பத்தி பாப்போம்.
படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்களிலேயே , படத்தின் பிரம்மாண்டம் தியேட்டர் முழுவதும் வியாபிக்க ஆரம்பித்து விடுகிறது . படத்தின் கிராபிக்ஸ் கலைஞர்கள் ஒரு நிஜமான பூலோக பிரளத்தையே கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். படத்தின் நிஜமான கதாநாயகன் கிராபிக்ஸ் தான். மிரட்டி எடுக்கும் கோணங்களில் ஒளிப்பதிவும் பிரமாதம்.
ஆனால் கதாபாத்திரங்கள், தங்களுக்கு பின்னால் உலகமே அழிந்து கொண்டிருக்கும் போது , ஏதோ டிவி பார்ப்பது போன்று அதை பார்க்கிறார்கள் .
இப்படி ஒரு படம் , இந்தியத் திரை உலகில் எடுக்கப் படுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது (இப்போதைக்கு ! ) . ஆனால் நம்மவர்கள் ' டப்பிங் ' பேசிய விதம் , ஒரு தமிழ்ப் படம் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கிறது. படத்தில் ஆங்காங்கே நகைச்சுவைக்கும் இடமிருக்கிறது. தமிழில் வசன உபய தாரர் பாராட்டுக்குரியவர். சில சமயங்களில் அரங்கம் அதிரும் அளவிற்கு கைத் தட்டல்கள். முக்கியமாக இந்திய விஞ்ஞானி ஒருவரைப் பாராட்டும் போது ! சில இடங்களில் வசனமில்லாத போதும் கைதட்டல் பறக்கிறது.
படத்தில் உள்ளது போன்று இரண்டாயிரத்திப் பன்னிரெண்டில் உலகம் அழிகிறதோ இல்லையோ, ஒருவேளை அழிந்தால் இப்படி இருக்கலாமோ என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்குகின்றது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளில், மோசமானதாக இருக்கக் கூடிய பல இயற்கை சீற்றங்களை ஒன்றிணைத்து , படம் பண்ணியிருக்கிறார்கள்.
ருத்ரம் சொல்ல வரும் விஷயம் - ' உலகம் பத்ரம் ( பத்திரம் ) ' !