Sunday, October 18, 2009

சொர்க்கமே என்றாலும்...

டிஸ்கி : இது போன தீபாவளிக்கு நான் எழுதிய இடுகை .
அப்போது பல திரட்டிகளில் இணைக்கவில்லை . இப்போது இணைக்கிறேன் !
(ஏதோ நானும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற நினைப்பில்  எழுதிய இடுகை இது ! )



இந்த முறை தீபாவளி சென்னையில் தான்.
இதுதான் முதல் முறை கூட.

எனக்கு தெரிந்து பண்டிகைகளின் உண்மையான வாசத்தை கிராமங்களில் தான் நுகர முடிகிறது. பிழைப்பிற்காக சென்னை வந்த அனைவரும் இதை வழிமொழிவார்கள் என்றே எண்ணுகிறேன்.

இன்றும் சாதாரண விடுமுறை நாட்களை விட, பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியூர்ப் பேருந்துகளில் செல்வோரின் கூட்டம் சற்றே அதிகமாக இருக்கிறதைப் பார்க்க முடிகிறது. (மற்ற எந்த நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாதவர்களும் இது போன்ற பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஊர் செல்ல விரும்புகின்றனர் ?)

இதை எப்படி எடுத்துக் கொள்வது?
இவ்வாறானவர்களை அவர்களின் ஊர் அழைக்கிறதா? அல்லது சென்னை அவர்களை விரும்புவதில்லையா?அல்லது அவர்கள் சென்னையை விரும்புவதில்லையா? என்றால் இத்தனை நாள் எப்படி அவர்கள் இங்கிருந்தார்கள்?

மாநகரமானது , மனிதர்களை மாற்றிவிடுவது போல, பண்டிகைகளையும் மாற்றி விடுகிறது போலும் ! அல்லது மனிதர்கள் இடத்திற்கு இடம் மாறுவதைப் போல,பண்டிகைகளும் தன் இயல்பை மாற்றிக் கொள்கின்றன !

நான் பால்யத்தில் கண்ட தீபாவளிக்கும் , இப்போது காணும் தீபாவளிக்கும் உள்ள வித்தியாசங்கள் மிக அதிகம்.அன்று புதுத் துணிக்கும், பட்டாசுக்கும் , இனிப்பு,காரங்களுக்கும் ஏங்கிய மனது இன்று அவற்றை ஏற்க மறுக்கிறது, அல்லது கூச்சம் கொள்கிறது.என்றால் , வயதுதான் பண்டிகைக் கொண்டாட்டங்களை தீர்மானிக்கிறதா? ஆனால், இன்றும் நாற்பது ஐம்பது வயதுகளிலும் புதுத் துணியுடன் பட்டாசு வெடிப்பவர்களை காண முடிகிறதே?
அவர்கள் ஏன் கூச்சம் கொள்வதில்லை? (ஏன் கூச்சம் கொள்ள வேண்டும் ?) .
அவர்கள் இன்னும் பால்யத்தின் கரைகளில் இருந்து வெளிவர விருப்பமற்றவர்களா?

ஒவ்வொருவருள்ளும் பால்யமானது தனது இருத்தலை பண்டிகைகள் மூலம் வெளிப்படுத்த முயன்று கொண்டுதானிருக்கிறது .வெகு சிலரே அதை அனுமதிக்கிறார்கள். பண்டிகை முடிந்தவுடன், அவர்கள் மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்புவது போலவே, தம் வயதிற்கும் திரும்புகின்றனர்.


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !







No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...