Sunday, November 29, 2009

ருத்ரம்...

இன்று அடையாறு கணபதிராம் தியேட்டரில் ' ருத்ரம் ' படம் பார்க்க போயிருந்தேன். ரெண்டே முக்கா மணி ஷோவுக்கு , ஒண்ணே முக்காவுக்கே போயாச்சு . படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் ஆகியும் கூட்டம் கொறஞ்சபாடில்ல. ஆனாலும், ' நாமதான் சீக்கிரம் போய்ட்டோமே ' ன்னு நாப்பது ரூபா கியூவில நின்னேன். (பால்கனி டிக்கெட் ஐம்பது ரூபா) . கடைசியில நாற்பது ரூபா டிக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாக்கு குடுத்தாங்க. அதிலயும் அஞ்சு ரூபா மீதி சில்லறை இல்லன்டானுங்க.

நானெல்லாம் பஸ்ல ஐம்பது காசு மீதி குடுக்கலன்னாவே , கண்டக்டர்கிட்ட கேட்டு வாங்கற ஆளு. ஆனா இங்க என்னடான்னா , அஞ்சு ரூபாவ ஆட்டயப் போட்ட ஒடனே எனக்குள்ள இருக்குற ' அந்நியன் ' , முழிச்சுக்கப் பார்த்தான். ஆனா, படம் போட்டாச்சுனு தெரிஞ்சதும் , அந்நியன் சகிதமா, அமைதியா , உள்ள என்டர்ஆயாச்சு.

சரி இந்த கதைய விடுங்க. நம்ம , ' ருத்ரம் ' பத்தி பாப்போம்.

படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்களிலேயே , படத்தின் பிரம்மாண்டம் தியேட்டர் முழுவதும் வியாபிக்க ஆரம்பித்து விடுகிறது . படத்தின் கிராபிக்ஸ் கலைஞர்கள் ஒரு நிஜமான பூலோக பிரளத்தையே கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். படத்தின் நிஜமான கதாநாயகன் கிராபிக்ஸ் தான். மிரட்டி எடுக்கும் கோணங்களில் ஒளிப்பதிவும் பிரமாதம்.

ஆனால் கதாபாத்திரங்கள், தங்களுக்கு பின்னால் உலகமே அழிந்து கொண்டிருக்கும் போது , ஏதோ டிவி பார்ப்பது போன்று அதை பார்க்கிறார்கள் .

இப்படி ஒரு படம் , இந்தியத் திரை உலகில் எடுக்கப் படுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது (இப்போதைக்கு ! ) . ஆனால் நம்மவர்கள் ' டப்பிங் ' பேசிய விதம் , ஒரு தமிழ்ப் படம் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கிறது. படத்தில் ஆங்காங்கே நகைச்சுவைக்கும் இடமிருக்கிறது. தமிழில் வசன உபய தாரர் பாராட்டுக்குரியவர். சில சமயங்களில் அரங்கம் அதிரும் அளவிற்கு கைத் தட்டல்கள். முக்கியமாக இந்திய விஞ்ஞானி ஒருவரைப் பாராட்டும் போது ! சில இடங்களில் வசனமில்லாத போதும் கைதட்டல் பறக்கிறது.

படத்தில் உள்ளது போன்று இரண்டாயிரத்திப் பன்னிரெண்டில் உலகம் அழிகிறதோ இல்லையோ, ஒருவேளை அழிந்தால் இப்படி இருக்கலாமோ என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்குகின்றது. உலக வெப்பமயமாதலின் விளைவுகளில், மோசமானதாக இருக்கக் கூடிய பல இயற்கை சீற்றங்களை ஒன்றிணைத்து , படம் பண்ணியிருக்கிறார்கள்.

ருத்ரம் சொல்ல வரும் விஷயம் - ' உலகம் பத்ரம் ( பத்திரம் ) ' !


Saturday, November 21, 2009

இடைத் தேர்தல் 2009
தமிழ் நாட்டில் தற்போது காலியாக உள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடை பெறும் தேதியை,(டிசம்பர் பத்தொன்பது அன்று ஓட்டுப்பதிவு) தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

கடந்த முறை நடை பெற்ற ஐந்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணித்த அ.தி.மு. க , இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் என்று , அதன் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் அப்போது அதனுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க மற்றும் கம்யுனிஸ்டுகள் இன்று பிரிந்து விட்டன. ம.தி.மு.க மட்டும் கூட்டணியில் தொடர்கிறது (புயல் போயஸ் கார்டனிலேய மையம் கொண்டுள்ளது ! ) .

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஏன் இடைத் தேர்தல் நடக்கிறது ? வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் , இறந்து விட்டார். திருசெந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் , அ.தி.மு.வில் இருந்து விலகி தி.மு.க வில் சேர்ந்து விட்டார். ஆக, திருச்செந்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அனிதா வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில், போட்டி கடுமையாக இருக்கும். ஏனென்றால் , தன்னுடைய செல்வாக்கை தி.மு.க தலைமைக்கு காட்ட வேண்டிய கட்டாயம் அனிதாவிற்கு இருக்கிறது. அதே நேரத்தில், " அனிதாவின் இழப்பு தங்களுக்கு ஒன்றும் பெரிதல்ல " என்று அ.தி.மு. வும் காட்டியாக வேண்டும் ! பொதுவாக இடைத் தேர்தல் என்றாலே மக்களுக்கு குஷி பிறக்கும். அதுவும் , " தென் மண்டலத்தில் " நடப்பதால் , மக்களின் ' குறைகள் ' தீர்க்கப்படும் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையில் - தோழர்கள், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர் என்ன செய்யப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. மருத்துவர் ஐயா அநேகமாக அறிவாலயம் சென்றுவிடுவார் போலிருக்கிறது. போகும் போது தோழர்களை கூட்டிகொண்டு போவாரா என்று தெரியவில்லை. நம்ம சிங்கம் ,கேப்டன் இந்த முறையும் சிங்கிலாகத்தான் நிற்பார் போலிருக்கிறது.

மொத்தத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதி மக்கள், வேட்பாளர்களின் ' அன்பினால் ', திக்கு முக்காடப் போவதென்னவோ உண்மை ! ஆடுகள் தான் பாவம்.

குறிப்பு : இது என்னுடைய முதல் அரசியல் பதிவாகும். அப்போ இந்த பதிவு எந்தவகையை சேர்ந்தது ? னு கேக்கறீங்களா ? இது இலக்கியப் பதிவாக்கும் ! :)

Saturday, November 14, 2009

கண்டேன் காதலை - கண்டேன் ...
இன்னைக்கு மதியம் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் ,' கண்டேன் காதலை ' படம் பார்த்தேன். நம்ம சின்னத் தளபதியோட படத்த இப்பதான் முதல் முறை தியேட்டரில் பார்க்கிறேன்.நம்ம பசங்க கொஞ்ச பேர் ஏற்கனவே படம் பாத்துட்டு, படம் மொக்கைனு சொன்னாங்க. இருந்தாலும், நாம ஏற்கனவே முடிவு பண்ணினதால, கெளம்பி போயாச்சு.

இந்த படத்தோட ஒரிஜினல் - ' ஜாப் வீ மெட் ' படத்த, இதுவரைக்கும் பாத்ததில்ல. அதனால எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன். என்னை பொறுத்த வரைக்கும் ஒரு படம் பார்க்க போறோம்னா , படத்தோட சென்சார் சர்டிபிகேட் போடறதுல இருந்து பார்க்கணும் னுதான் ஆசை.அப்படி பார்த்தாதான், முழு படமும் பார்த்த மாதிரி ஒரு ' பீலிங் '. ஆனால், இப்போதெல்லாம் , ' படம் பாத்தா போதும் ' ங்கற நிலைமைல இருக்கறதால, ஒரு அஞ்சு நிமிஷம் படம் ஓடின பிறகும் என்டர் ஆனேன்.

ஒரு லவ் பாயாக , சின்னத் தளபதி கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் ' பிசினஸ் மேக்னட் ' வேடத்தில் கண்ணை உறுத்துகிறார்.தமன்னா ஒரு அப்பாவி பெண்ணாக காட்டப் பட வேண்டும் என்பதற்காக, 'தொண தொண ' வென்று பேசிக் கொண்டே இருப்பதால், ஒரு அலுப்பு வருவது என்னவோ உண்மை. நம்ம சந்தானம், வழக்கம் போல் சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் லந்து கூட்டி கலக்கியிருக்கிறார்.

ரொம்ப நாள் கழிச்சு வித்யா சாகர் மியூசிக்ல ஒரு படம் பார்த்தேன். பாடல்களில் ' மக்கா மக்கா ', ' ஓடோடி போறேன் ' போன்றவை அக்மார்க் வித்யா சாகர் ராகங்கள். ஒளிப் பதிவும் அருமை.

படத்தை ' சன் பிக்சர்ஸ் ' வாங்கியிருப்பதால் , எப்படியும் ' ஹிட் ' ஆக்கி விடுவார்கள். ஏன்னா , ' திண்டுக்கல் சாரதி ' யவே சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை அவர்களுக்குண்டு. ஆனால், ஒரு ஹிட் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களும், 'கண்டேன் காதலை ' க்கும் உண்டு.

கண்டேன் காதலை - காணலாம் ஒருமுறை !


Wednesday, November 11, 2009

ஒரு ஆட்டோ கிராப்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வரை போயிருந்தேன்.என்னுடன் பனிரெண்டு வருடம் கூட படித்தவனுடைய ( !) அண்ணனுக்கு கல்யாணம் என்றால் போகாமல் இருக்க முடியுமா ?

முதலில் என்னுடன், நண்பனுடன் வேலை செய்யும் இருவர் வருவதாக இருந்தது.இருவரும் தெலுங்குக் காரர்கள்.தமிழ் பேசத் தெரியாது. மழை காரணமாக ஒருவர் வரமுடியவில்லை(தப்பித்தார் !) .

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்த மழை சனிக்கிழைமை நாங்கள் ரயில் ஏறும் வரையிலும் குறையாமல் பெய்து கொண்டிருந்தது.இருந்தாலும் மழையின் மீது துளி வெறுப்பும் வரவில்லை.மாறாக மழையில் நனைவதை மனம் விரும்பத்தான் செய்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் மழையில் நனைபவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. யாருக்குமே மழையில் நனைய விருப்பம் இருப்பதில்லையா என்ன? நனைந்தால் உடல் நலம் பாதிக்கும் என்ற பயம்தான் காரணம் போலும் !

சென்னை முதல் ஆம்பூர் வரை ரயில், பின்பு அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை பேருந்து பயணம். நேரமாகிக் கொண்டே போனதால் உட்கார இடமில்லையென்றாலும், ஏறி ஒருவழியாக எழு மணி ரிசப்சனுக்கு( இந்திய நேரப்படி !)எட்டு மணிக்கு போய்சேர்ந்தோம்.

வீட்டிற்கு தொலை பேசிய போது அன்று இரவு வரை சென்னையில் மழை பெய்ததாக சொன்னார்கள்.

எனது பால்யத்தின் சுவடுகள் இந்த ஊரில்தான் பதிந்திருக்கின்றன.இதை எனது சொந்த ஊர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒருவருக்கு சொந்த வீடு இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா ? அல்லது சொந்த பந்தங்கள் இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா? என்றால் இந்த இரண்டுமே எனக்கு இங்கு இல்லை. இருந்தாலும் யாரவது என்னிடம் ' உங்க சொந்த ஊர் எது ? ' என்று கேட்கும் போது, முதலில் என் ஞாபகத்திற்கு வருவது , கிருஷ்ணகிரி தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்து நண்பர்களை சந்திக்கும் ஆவலுடன் தான் எனது இந்த பயணம் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இருபது பேர் வந்தார்கள். ரெண்டு பேர் மிலிடரி, ரெண்டு பேர் டாக்டர், ரெண்டு பேர் சுயதொழில் என்று ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கிறார்கள். கொஞ்ச பேர் தந்தையாகி இருந்தார்கள்.அந்த ஊரிலேயே வேலை பார்ப்பவர்களை பார்த்து கொஞ்சம் பொறாமையும் வந்தது !

திருமணம் முடிந்து மதியம் லன்ச் ஐயும் முடித்துக் கொண்டு , பேருந்திலேயே கிளம்பி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தோம்.வந்தவுடன் மழை மீண்டும் பொழிய ஆரம்பித்திருந்தது.Friday, November 6, 2009

மும்பை வீரன்தானே... அவன 'அடிக்க' விட்டே 'வீணே ( ! )' ...


இன்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. எழு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இது வரை நடந்த நான்கு போட்டிகளில் ரெண்டுக்கு ரெண்டு என்று ரெண்டு பேரும் சரி சமமான நிலையில் இருந்தனர்.


இருபது ஓவர் போட்டி வந்தவுடன்,இப்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகள் மிகவும் நீளமானதாக தோன்றுகின்றன. அவர்கள் முன்னூத்தி ஐம்பது ரன்கள் எடுத்தவுடனே , போட்டியின் முடிவை அனைவரும் கணித்திருப்பார்கள், என்னைப் போலவே. நம்ப ஆளுங்க என்னிக்கு முன்னூத்தி ஐம்பது ரன்களை சேஸ் பண்றது ? ன்னு அவனவன் வேலையை பாக்க போய்ருவாங்கன்னு பாத்தா , நம்ம அண்ணாத்த சச்சின் விட மாட்டேன்கிறாரே ?!

வயசு முப்பத்தி ஆறு ஆனாலும் அடி ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரியில்ல இருந்துச்சு ? ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு ஆட்டம் சச்சின் கிட்ட இருந்து.
ஆனாலும் நம்ம கணிப்பு படி ( ! ) 'சேசிங்க்ல சச்சின் நூறுக்கு மேல போன இந்தியா தோத்துடும்' ங்கறது சரியாதான் இருக்கும் போல !

நாம என்னதான் இங்கன உக்காந்துக்கிட்டு 'டோனி அஞ்சாவது டவுன் இறங்கியிருக்கணும்','சச்சின் ஒன்னாவது டவுன் இறங்கியிருக்கணும்','ஹர்பஜனுக்கு முன்னாடி ஜடேஜா இறங்கியிருக்கணும் ', னு சொல்லிரலாம் னாலும் ,அண்ணன் தோனிக்கு தெரியாததா நமக்கு தெரிஞ்சுடப் போகுது ?

எது எப்படியோ சச்சின் எழு ரன் எடுத்தாப் போதும்ன்னு நெனச்ச நேரத்துல, நூத்தி எழுபத்தஞ்சு அடிச்சது என்னவோ சந்தோசந்தான். ஒவ்வொரு விக்கெட்டுமே ஆட்டத்தின் திருப்பு முனைதான்.கடைசி நேரத்துல பிரவீன் குமார் கொஞ்சூண்டு நம்பிக்கை கொடுத்தார். .ஆனாலும் மேட்ச் வின் பண்ணியிருக்கலாம்.

என்னோட ஞானக் கண் பார்வையை பொறுத்த வரைக்கும், 'என்ன நடக்கும் ?' அப்படின்னா , அடுத்த மேட்ச் இந்தியா வெற்றி பெறும். கடைசி மேட்ச் தான் தொடரை யார் வெல்லப் போறாங்கன்னு முடிவு பண்ணும்.


Sunday, November 1, 2009

ஆதவன்

போன வாரம் நண்பனோட அக்கா கல்யாணத்துக்காக மேலூர் வரைக்கும் போயிருந்தேன்.போன எடத்துல கைய கால வெச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே ?! பசங்க கூப்டாங்கன்னு 'ஆதவன்' படம் பாக்கலாமுன்னு போனேனுங்க.

என்னுடைய கொள்கைப் ( ! ) படி, படத்தோட கதைய கேக்காமதான் போனேன்.
இருந்தாலும் நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா? ' படம் செம மொக்க டா ' ன்னு (நம்மள விடவா ?!) சொல்லியும் கேக்காம போனேன்.போனதே பத்து நிமிஷம் லேட். என் நேரம் பார்த்து சூர்யாவ சேஸ் பண்ற சீன்ல இருந்துதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா சொல்லக்கூடாதுங்க , மனுஷன் என்னமா பறந்து பறந்து எஸ்கேப் ஆகறார் தெரியுமா? நம்ம சிலந்திப் பயபுள்ளயவே (அட ... ஸ்பைடர் மேன் தாங்க !) மிஞ்சிட்டார் போங்க.

படத்தின் முதல் பாதியில் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வாராயோ , அசிலி பிசிலி, டமக்கு டமக்கு பாடல்கள் ஹாரிஸ் பெயரை பறை சாற்றுகின்றன. பின்னணி இசைக்கு அவ்வளவாக வேலை இருப்பதாக தெரிய வில்லை.

கேமரா வும் ஓகே.ஆனால் நயன் தாராவின் க்ளோசப் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோ ?

வழக்கம் போல (ஒவ்வொரு படத்திற்கும் ) சூர்யா நடிப்பில் ஒரு மெருகு கூடியிருக்கிறது.பிளாஷ் பேக்கில் வரும் பத்து வயது சூர்யா,முதலில் திரையை உறுத்தினாலும், பிறகு பழகி விடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் எதோ அவசரத்தில் படத்தை எடுத்தது போலிருக்கிறது.
(தரணி 'குருவி' யை எடுத்து போல்!). கதை ரமேஷ் கண்ணா வாமே?

ஆதவன் - லாஜிக் பார்க்கா - ஆதவன்.
ஆனால் பிளாப் - ஆகா - ஆதவன்.


Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *