Friday, January 29, 2010

சாப்ட் வேர் துறையில் தொழிற்சங்கங்கள்...இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ சீரியசாக எழுதப் போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். ஒரு நகைச்சுவை ( !) கலந்த கற்பனை முயற்சிதான் ! இன்றைய நிலைமையில் எனக்குத் தெரிந்து மென்பொருள் துறையில் மட்டுமே தொழிற்சங்கங்கள் இருப்பதில்லை ( அல்லது அனுமதிக்கப் படுவதில்லை).ஆனால் அவ்வாறு தொழிற்சங்கங்கள் இருந்தால் , நாம் கேள்விப் படக் கூடிய செய்திகள் எப்படி இருக்கும் ?! மேலே படியுங்கள் , இல்லை இல்லை கீழே படியுங்கள் !

*************************************************************************************
செய்தி நம்பர் ஒன்று :

அகில இந்திய டெவலப்பர் சங்க பேரவை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது - மென்பொருள் துறையில் வேலை செய்யும் அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , நாளை ஒரு நாள் அடையாள " பக் எழுதும் " போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு சாப்ட் வேர் ஆசாமிகளும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு ___________________ என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
 
(நிர்வாகம் - இல்லைன்னா மட்டும் இவனுங்க பக் இல்லாம ப்ரோக்ராம் எழுதிடுவானுங்க ?! )
செய்தி நம்பர் இரண்டு :

தமிழக சாப்ட்வேர் சங்கங்களின் கூட்டமைப்பு , இன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை : முறையான காரணமின்றி, இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரத்தி இருநூறு மென்பொருள் ஊழியர்களை , எந்த நிபந்தனையுமின்றி உடனே பணியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி , ____ பார்க் அருகே நடை பெறும், மாபெரும் உண்ணா விரதப் போராட்டத்தில் நமது மதிப்பிற்குரிய தலைவர் திரு._______________ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு , தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

குறிப்பு : உண்ணாவிரதத்திற்கான சாப்பாடு டோக்கன்களை , மன்னிக்கவும் - உண்ணா விரதத்திற்குப் பிறகான சாப்பாட்டு டோக்கன்களை www .உண்ணாவிரதம்.நான்-veg .com (சைவம் ) மற்றும் www .உண்ணாவிரதம்.நான்-non-veg .com (அசைவம் ) என்கிற வெப் சைடில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

செய்தி நம்பர் மூன்று :

அனைத்துலக டெஸ்டிங் பாசறையின் மூன்றாமாண்டு மாநில மாநாடு வரும் பிப்ரவரி இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் மதுரை மேலூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொரு " ப்ராஜக்ட் மேனேஜரும் " , குறைந்தது இருபது           " Trainee " களை கூட்டிவர வேண்டும் என்று நமது பாசறையின் செயலாளர் திரு._______________ அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

*************************************************************************************
மேலே உள்ள கோடிட்ட
இடங்களை உங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது வேண்டாதவர்களின் , பெயர்களையும் தொலைபேசி நம்பரையும் கொண்டு நிரப்புங்கள். தைரியம் இருந்தால் உங்கள் ப்ராஜக்ட் மேனேஜருக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள் !

Monday, January 18, 2010

குட்டி...
நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று மொத்தம் இரண்டு சோகச் செய்திகள்...
ஒன்று முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் திரு . ஜோதிபாசு மறைவு.
இன்னொன்று , நான் குட்டி திரைப்படம் பார்த்தது :(

படம் முழுவதும் ஒரு செயற்கைத் தனம் இழையோடுகிறது. மித்ரன் ஆர்.ஜவஹரின் முதல் படம் ( யாரடி நீ மோகினி ) எனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகும்.ஆனால், அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற என்னைப் போன்றவர்களை ஏமாற்றி விட்டார் என்றே நினைக்கிறேன். அவ்வளவாக ' ரீச்' ஆகாத பாடல்களும் படத்திற்கு குறைதான்.
தனுஷின் கதாபாத்திரம், ' சச்சின் ' விஜய்யை ஞாபகப் படுத்துகிறது.

படம் எடுக்குற கஷ்டம் அதை எடுக்குறவங்களுக்குதான் தெரியும் அப்படினாலும்,
விமர்சனம் எழுதுவது மிகச் சுலபமானது தானே ?!

இன்னும் கொஞ்சம் மெனக் கெட்டிருந்தால் , குட்டி கொஞ்சமாவது சுட்டியாக இருந்திருப்பான்.

Sunday, January 17, 2010

ஜோதி பாசு மறைவு...

இன்று மாலை நாளிதழ்களில், தலைப்பு செய்தி - "ஜோதி பாசு மரணம் " !
மேற்கு வங்காளத்தில் , கம்யூனிஸ்ட் கட்சியை அசைக்க முடியாத சக்தியாக மாற்றிய பெருமை ஜோதி பாசுவுக்கே சேரும். சில மாதங்களாகவே மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு , ஐ. சி . யு வில் சிகிச்சை பெற்றுவந்த ஜோதி பாசு , இன்று மதியம் காலமானார். அவருடைய இழப்பு கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமல்ல , இந்தியாவுக்கே பேரிழப்புதான். அவருடைய இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபமுமல்ல ! நேர்மையான அரசியலுக்கு என்னக்கு கொடுக்கப் பட்ட மிகச் சில உதாரணங்களில் , ஜோதி பாசுவும் ஒருவர்.


Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன்...

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் , நிறைய போராட்டங்களுக்கும் பிறகு , ஒரு வழியாக இந்த பொங்கலன்று "ஆயிரத்தில் ஒருவன்" ரிலீஸ் ஆகிவிட்டது. நேற்று இரவே, என் நண்பன் படத்திற்கு போயிட்டு வந்து , 'கதையே புரியலடா' ன்னு சொல்ல ஆரம்பிச்சான். ஆனா அவன்கிட்டயும் 'கதை புரியலன்னாலும் பரவால்ல , என்கிட்டே சொல்லாத' ன்னு , நம்ம கொள்கையை ( ! ) நிலை நிறுத்தி விட்டு , இன்று பிற்பகல் ஷோவிற்கு சென்றேன். எங்கயா ? வழக்கம் போல திருவான்மியூர் தியாகராஜாவிற்குதான் !

கேட்டிற்கு வெளியே , டிக்கெட்டை பிளாக் கில் விற்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை , கவுண்ட்டரில் டிக்கெட் கிடைக்காதோ என்று உள்ளே போனால் , கவுண்ட்டரில் கூட்டமே இல்லை ! ஆனால் நாற்பது ருபாய் டிக்கெட்டை, தியேட்டர் காரர்களே நாற்பத்தைந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளை , நான் உள்ளே போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை. சில பல விளம்பரங்களுக்குப் பிறகு இனிதே படத்தை ஆரம்பித்தார்கள்.

என்னுடைய விமர்சனங்களில் , படத்தின் கதையை ஒருபோதும் சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இதுவரையும் அப்படித்தான். படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே , திரைக்கதை , வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. காடுகளும், ஆபத்துகளும் நிறைந்த பாதை அது. இதுவரை , தமிழ் சினிமா பயணிக்காத பாதையும் கூட ( எனக்குத் தெரிந்து ) ! இப்படி ஒரு படத்தைத் தயாரிப்பதற்கு , முன்வந்த தயாரிப்பாளர் மிகவும் பாராட்டிற்கு உரியவர்.

கார்த்தி யின் இரண்டாவது படமிது ! அவ்வளவாக வசனங்களுக்கு வேலையில்லாததால் , வசனம் பேசும் சில இடங்களிலும் ' பருத்தி வீரன் ' வெளிப்படுகிறான். ஆண்ட்ரியாவும் , ரீமாசென்னும் கார்த்திக்கு சமமான கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு கிராபிக்ஸ் உதவி இருக்கிறது. ஆனால் , இயல்பான காட்சிகளுடன் பொருந்தி விடுவதால் சுவாரஸ்யம் குறைவதில்லை !

ராம்ஜி யின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரும் பலம். வெவ்வேறு காலங்களில் , பயணிக்கும் கேமரா , நம்மையும் அந்தந்த காலங்களுக்கு கூட்டிச் செல்கின்றது. ராம்ஜிக்கு ' ஆயிரம் பொற்காசுகள் ' பரிசளிக்கலாம். அடுத்த படியாக, ஜி. வி . பிரகாஷ் குமார் ! செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் , வேதியியல் ( அட , கெமிஸ்ட்ரி தாங்க) இந்த புதிய கூட்டணிக்கும் இருக்குமா என்று கேட்டவர்களுக்கு, நல்ல பதில் சொல்லியிருக்கிறார் ஜி.வி ! வாழ்த்துக்கள் !
இந்த கூட்டணி , " மாலை நேரத்து மயக்கம் " வரை தொடர்கிறது.

அப்புறம் , பார்த்திபனைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே ?! என்னத்த சொல்றது , நீங்களே படத்துல பாருங்க. பிரமாதம். முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில், தனுஷ் இருப்பதாக இருந்தது. நல்ல வேளை , தனுஷ் தப்பித்தார் ! நாமும் !! அந்த இடத்தில் , தனுஷை கற்பனை செய்து பார்ப்பதே சற்று கடினமானதாக இருக்கிறது.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது , அருகில் என் இருந்த ஒருவர் " ஓம் மேல ஆசைதான் " பாடலை , தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது , திரையரங்க ஊழியர்கள் வந்து செல்போனை 'பறி'முதல் செய்தனர். இந்த நேர்மை , டிக்கட் கவுண்ட்டரிலும் இருந்திருந்தால் பரவாயில்லை !

நண்பன் சொன்னது போல் , எனக்கும் கதை முழுமையாக புரியவில்லை. அதனால் என்ன ? இசையைப் புரிந்திராதவர்கள் கச்சேரிகளுக்குப் போவதில்லையா ? சில விஷயங்களுக்கு புரிதலைக் காட்டிலும் , பிடித்தல் தான் முக்கியம்.

எல்லாம் சரி , படம் எப்படி ?
என் பக்கத்துக்கு சீட்டில் இருந்தவர் அடித்த கமன்ட் -

" ங்கோ ...... படத்த என்னமா எடுத்திருக்காண்டா !!! ".

என் கருத்தும் கிட்டத் தட்ட இதைப் போன்றதுதான் !

Sunday, January 10, 2010

சென்னை புத்தகக் காட்சி...இன்று மாலை நானும் என் நண்பனும் முப்பத்தி மூன்றாவது ( எப்படி நம்பரை டைப் பன்றதுன்னே தெரியல. நம்பர் டைப் பண்ணினாலும் , அது தமிழ் நம்பரா மாறிடுது. ஒவ்வரு முறையும் வார்த்தைகளாலேயே சொல்ல வேண்டியது இருக்கு ! ) சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். போன முறை கூட வந்த ஒருவன் , இந்த முறை கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டான்.

மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு, இந்திய நேரப் படி நான்கு மணிக்குதான் காட்சி வளாகத்தினுள் சென்றேன். போன முறை , போகும் போதே ,
எஸ். ராமகிருஷ்ணனின் புத்தகங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றுதான் சென்றேன். அனால் இந்த முறை அப்படி இல்லை. போன முறை வாங்கிய புத்தகங்களில் இரண்டை மட்டுமே படித்தேன் . இன்னொன்று ஆறு மாதங்களாய் தொடப் படாமலே இருக்கிறது !

கடந்த வாரம் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தும், சில ஆணிகள் பிடுங்கப் பட வேண்டி இருந்ததாலும், ' கம்பேனி ' க்கு ஆள் இல்லாததாலும், போகவில்லை. இன்றும் போகாமல் இருந்தால், ஒரு புதிய பதிவு போட முடியாமல் போய் விடும் என்பதால், ஒருவழியாக, இன்று போயே விட்டேன். கிட்டத் தட்ட ஆறுநூறு ஸ்டால்கள் இருந்தன. நண்பனுக்கு ஆயிரம் ரூபாயும் , எனக்கு ஐநூறு ரூபாயும் பட்ஜெட் !

பாதி சுற்றி முடிப்பதற்குள்ளாகவே, நண்பன் ' உச்ச வரம்பை ' நெருங்கி விட்டிருந்தான். நான் சில பதிப்பகங்களில் இரண்டு மூன்று புத்தகங்களை பார்த்து வைத்திருந்தேன். பின் என்னுடைய ' உச்ச வரம்பிற்குள் ' , மனதுக்கு பிடித்தமான இரண்டு கதாசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பினை வாங்கி வந்தேன்.

இந்த புத்தகக் காட்சியில் சில பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் , பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குனர்கள் திரு.சேரன், திரு . பால சந்தர், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், உதய சந்திரன் இ.ஆ.ப, திரு . பழ.நெடுமாறன்,
நடிகை சுகன்யா போன்றோர் வந்திருந்தனர். என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவரைக் கூட இன்று புத்தகக் காட்சியில் பார்த்தேன்.

உயிர்மை பதிப்பகத்தில் , சாரு நிவேதிதாவும் , மனுஷ்ய புத்திரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சாருவின் பத்து புத்தகங்கள் தொகுப்பை வாங்குபவர்களுக்கும் , மேலும் கேட்பவர்களுக்கும் ஆட்டோ கிராப் போட்டுக் கொண்டிருந்தார் சாரு . விகடன் பிரசுரத்தில் வழக்கம் போல் கூட்டம். நக்கீரன் பதிப்பகமும் பிரம்மாண்டமாக அரங்கு அமைத்திருந்தனர். கடைசி நாள் என்பதால், கூட்டமும் அதிகம் !

பாதி சுற்றி முடிப்பதற்குள் , உடல் அலுப்பு கண்டு விட்டது ! மீதியை அடுத்த புத்தகக் காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தோம். அடுத்த முறையாவது ' உச்ச வரம்பை ' உயத்திக் கொண்டு போக வேண்டும் ! மக்கள் , எழுத்தாளர்களின் பெயரைக் சொல்லி , அவர்களின் புத்தகங்கள் இருக்கிறதா ? என்று கேட்பதை பார்க்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் சரி , இந்த பதிவின் ஜென்ம சாபல்யம் இன்னும் சொல்லப் பட வில்லையே ?

நான் வாங்கிய இரண்டு புத்தகங்கள் ,

>>> கி. ராஜ நாராயணன் கதைகள்.
வெளியீடு : அகரம் .
விலை : ருபாய் இருநூறு .
( பத்து சதவீதம் தள்ளுபடி போக, ருபாய் நூற்றி எண்பது ).

>>> புதுமைப் பித்தன் கதைகள்.
வெளியீடு : புதுமைப் பித்தன் பதிப்பகம்.
விலை : ருபாய் முன்னூற்றி ஐம்பது.
(பத்து சதவீதம் தள்ளுபடி போக , ருபாய் முன்னூற்றிப் பதினைந்து ) .


இந்த பதிவுக்காக , புத்தகக் காட்சியில் ஒரு புகைப் படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அனால் , கடைசி நேர அவசரத்தில் மறந்து விட்டேன்.

புகைப்படம் உபயம் : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்சங்கம்.


Wednesday, January 6, 2010

அந்நியர்களும் அன்னை தெரசாவும்...

கடந்த சில நாட்களாக சில அன்னியர்களையும் , அன்னை தெரசாவையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகிறது. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்நியன் நம்பர் ஒன்று :

கடந்த வாரம் நானும் என் தந்தையும், எல்.ஐ.சி யில் மாதந்திர பிரிமியம் கட்டுவதற்காக திருவான்மியூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அன்றுதான் அந்த மாதத்தின் கடைசி வேலை நாள் என்பதால் , கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கிட்டத் தட்ட இருபது பேர் வரிசையில் நின்றிருந்தனர். அனைவரும் ஏதோ ஒரு அவசரத்தில் இருந்தனர். ஏதோ ஒரு பதற்றம் அனைவரையும் தொற்றிக் கொண்டு இருந்தது. யாருக்குதான் வெயில்காலத்தில் வேர்வை சொட்டச் சொட்ட, வரிசையில் நிற்க பிடிக்கும் ?
அப்போது , முப்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் , கவுன்ட்டர் அருகில் வந்து ( வரிசையில் நிற்காமல் ) , தன்னை பணம் கட்ட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏதோ அவசர வேலை விஷயமாக, திருவள்ளூர் வரை போக வேண்டுமென்றும் , அதனால் தயவு செய்து தன்னை அனுமதிக்குமாறும் கோரினார்.

இப்போது பணம் கட்ட என்னுடைய முறை.எனக்குப் பின்னால் இருபது பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நீங்கள் என்ன செய்வீர்கள் ? பணம் பெறுபவரோ , " வரிசையில் நிற்பவர்கள் அனுமதித்தால், நான் பணத்தை வாங்கிக் கொள்கிறேன் " என்று கூறிவிட்டார் ! இதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் , அவர் திரும்பவும் பணம் கட்ட முயற்சித்தார்.

உடனே , வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் வந்து , வரிசையில் நின்று தான் பணம் கட்ட வேண்டும் என்று சத்தம் போட்ட உடனே, பணம் கட்ட வந்தவர் முகம் வாடி வெளியில் சென்றுவிட்டார். இயலாமையும், ஆற்றாமையும் , கோபமும் சேர்ந்து அவரை வெளியில் அனுப்பி விட்டன. என்னைப் பொறுத்தவரை , வரிசையில் நின்றவர் செய்தது சரிதான்.

அந்நியன் நம்பர் இரண்டு :

கிட்டத் தட்ட மேலே சொன்னது போன்ற ஒரு நிகழ்ச்சிதான் இதுவும். நேற்று இரவு கிண்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தேன் (திரும்பவுமா ?) . வழக்கம் போல், ஒருவர் தனக்கு மிக அவசரம் என்றும் , முக்கியமாக காஞ்சிபுரம் வரை போகவேண்டும், எனவே தன்னை பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். ஏ.டி.எம் மின் காவலரும் அவரை அனுமதிக்க எத்தனித்தார். எனக்கு முன்னால் இருந்தவர்கள், ஆட்சேபம் தெரிவித்ததும் , காவலாளி ஒரு புதிய விதியை கூறினார். போலீஸ் காரர்கள், மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு வரிசையில் நிற்காமலே பணம் எடுக்க உரிமை உண்டு என்றும், மேற்படி நபர் வங்கி அதிகாரி என்றும் கூறினார். அவர் உடனே ஒரு அடையாள அட்டையை காட்டினார். இருந்தும் ,
நம்மவர்கள் வெகுண்டெழுந்து , அவரை பணம் எடுக்க விடாமல் தடுத்தனர். இதிலும் எதுவும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அன்னை தெரசா:

இன்று காலை , புறநகர் பேருந்து ஒன்றில், பயணம் செய்து கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். ஓட்டுனர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை , எஞ்சின் மீது
அமருமாறு ஓட்டுனர் கேட்டுக் கொண்டார். அவர் உட்காரும்போது , தெரியாமல் தொலைக் காட்சி பெட்டியில் மோதிக் கொண்டார். மூன்று நொடிகள் கழித்து, அவர் தலையில் இருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. அனைவரும் , கர்சீப் எடுத்து அழுத்திப் பிடிக்குமாறு கூறினார்கள். அவரிடம் கர்சீப் இல்லை.

நான், எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே , பின்னால் இருந்து ஒரு புதிய வெள்ளைக் கர்சீப்பை நீட்டினார் ஒருவர். அவர் முகத்தைக் கூட பார்க்க வில்லை நான். முகத்தில் என்ன இருக்கிறது? ஒரு வேளை அன்னை தெரசாவின் முகச் சாயலும் இருக்கக் கூடும்.
என்னைப் பார்த்து நானே வெட்கப் பட்டுக் கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.


நம் ஒவ்வொருவருள்ளும், அன்னை தெரசாவும், அந்நியனும் உருவாக, கருவாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நம்மில் சிலரே , அவர்களை பிரசவிக்கின்றோம் . இல்லையா ?

Saturday, January 2, 2010

வேட்டைக் காரன்
இந்த புது வருடத்தை , ஒரு நல்ல படத்துடன் தொடங்கிய திருப்தியில் (அட , நெஜம்மாத்தாங்க !!) , ' வேட்டைக் காரன் ' விமர்சனத்தை எழுதுகிறேன் .

விஜய்யை பற்றியும் , வேட்டைக்காரன் பற்றியும் எக்கச் சக்கமாக , சர்தார்ஜி ரேஞ்சுக்கு எஸ்.எம்.எஸ் களும், மின்னஞ்சல்களும் ( நான் இப்போதெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளை ரசிப்பதில்லை ) வந்தாலும், படத்தை தியேட்டரில் தான் பார்ப்பது என்று முடிவு செய்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவான்மியூர் தியாகராஜாவில் நேற்று இரவு ' வேட்டைக் காரன் ' பார்த்தேன்.

ஏற்கனவே ஹிட் - ஆன பாடல்கள் படத்திற்கு பெரும் பலம் ( உபயம் - சன் தொலைக்காட்சி குழுமம் மற்றும் விஜய் ஆண்டனி ) . ஏற்கனவே தொடர்த் தோல்விகளால் ( குருவி , வில்லு ) துவண்டு போயிருந்த இளைய தளபதிக்கும், அவர் ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் தரக் கூடிய படம் இது. விஜயின் அரசியல் பிரவேசம் இந்த படத்தின் மூலம் தெளிவாகிவிடும் என்று நினைத்தவர்களுக்கு, படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியவுடன் சூட்சுமம் புரிந்திருக்கும்.

தீபாவளிக்கு வரவண்டிய படமிது. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக( ! ) டிசம்பரில்தான் வெளியிட முடிந்தது.

செல்லாவாக வரும் வில்லன் , தமிழுக்கு ஒரு நல்ல அறிமுகம் . வேத நாயகமாக வருவது , அட , நம்ம சக்கரக் கவுண்டர் ! அனுஷ்காவுக்கு, பாடல்களில் மட்டும் திறமைக்கு சவால். முதல் பாதியில் காதலும், காமெடியுமாக கலக்கும் விஜய், இரண்டாம் பாதியில், ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். படத்தில், ஆங்காங்கே சில தர்க்க ( லாஜிக் ) குறைபாடுகள் இருந்தாலும், வேகமான திரைக்கதை அந்த குறைகளை பூர்த்தி செய்து விடுகின்றது.

சரி , விமர்சனத்தின் இறுதியில், படத்தின் பெயரை பயன் படுத்தி ஒரு பன்ச் வைக்க வேண்டும் என்று , விதி ஒன்றும் இல்லையே ?!

---------------------------------------------------------------------------------------------
கீழே உள்ள படங்களில் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுங்கள் . (ஆங்கிலத்தில் சொன்னால் , ' ஆட் மேன் அவுட் ! )

>> குருவி ,
>> வில்லு ,
>> வேட்டைக் காரன்.

---------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள கேள்விக்கு என்னுடைய பதில், " வேட்டைக் காரன் " !

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *