Wednesday, December 30, 2009

கந்த கோட்டை - விமர்சனம்
கடந்த சனிக் கிழமை அன்று திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில், ' கந்த கோட்டை ' படம் பார்த்தேன். வழக்கம் போல இருபது ரூபா டிக்கெட்டுதான் ! (வேற வழி ?)!. போறதுக்கு முன்னாடி, நம்ம பசங்க எவனாவது வரானுங்களான்னு கேட்டேன். ' எந்த படத்துக்கு போறடா ? ' னு கேட்டாங்க. ஒண்ணு, வேட்டைக் காரன் .இல்லாட்டி கந்த கோட்டை-க்கு போவேன்னு சொன்னேன்.

' வேட்டைக் காரன் சி.டி ரூம்லேயே இருக்கு மச்சி ' அப்டின்னாங்க. (நான் திருட்டு சி.டி பார்ப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் !) .சரி, கந்த கோட்டை வரியாடானு கேட்டதுக்கு, இல்லடா னுட்டாங்க. தியாக ராஜாவுலதான் வேட்டைக் காரன் போட்டிருந்தாங்க. மக்கா , என்ன கூட்டம் ? இது வேலைக்கு ஆவதுன்னுட்டு, நாம கந்த கோட்டைக்கே போயாச்சு.

நான் பார்க்கும் முதல் நகுலன் படம் இதுதான். தன் பெற்றோர் காதல் திருமணம் செய்தாலும், அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, காதலையே சுத்தமாக வெறுக்கிறார் நகுலன். அனால் அவரையே, காதல் செய்ய வைக்கும் அளவுக்கு நாயகி பூர்ணா என்ன செய்கிறார் , அல்லது என்ன நடக்கிறது , அவர்களின் காதலுக்கு என்ன ஆச்சு என்பதை சொல்லும் படம் தான் இந்த கோட்டை.

ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற , நகுலன் முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்றார் போல், ஒரு அறிமுகப் பாடலும்,இரண்டு சண்டைக் காட்சிகளும் சேர்க்கப் பட்டுள்ளன. நகுலனின் நண்பனாக நம்ம சந்தானம் வழக்கம் போல் கலக்கி இருக்கிறார்.சந்தானம் வரும் இடங்களில் தியேட்டரில் கைத் தட்டல்கள். பாடல்களில், ' உனைக் காதலி என்று சொல்வதா ?' மட்டும் கொஞ்ச நேரம் ஞாபகத்தில் இருக்கிறது. முதல் பாதியில், அடிக்கடி குறுக்கிடுகின்றன பாடல்கள்.

திரையில் தோன்றும் போதெல்லாம், கத்தி கூப்பாடு பொட்டு , காதை செவிடாக்க முயற்சிக்கிறார் சம்பத். பழைய காலத்து தமிழ் சினிமா வில்லன் கதாப் பாத்திரம்.
அவ்வளவு பெரிய தாதாவிடம் , ' ப்ளே பாய் ' போன்று இருக்கும் நகுலன் சவால் விடுவது , கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு இடையில், சற்றே பழைய படங்களை ஞாபகப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் . அதிலும் , அந்த கிளைமாக்ஸ் ! (ஆஹா , இயக்குனர் பேர் மறந்து போச்சே !? , ஆங் , சக்திவேல் (நன்றி : மேலே உள்ள போஸ்டர்). இதுக்கு தான், படம் பார்த்த உடனே விமர்சனம் எழுதிடனுங்கிறது ! நிறைய விஷயம் மறந்து போச்சு !)

கந்த கோட்டை - கொஞ்சம் ஓட்டை.


Saturday, December 26, 2009

சுனாமி நினைவு நாள்...
இன்றுடன் , சுனாமி தாக்கி, ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. கடந்த இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு , இதே நாளில் , பல நாடுகளைத் தாக்கிய சுனாமி , கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்டது. எனக்கு விவரம் தெரிந்து , குஜராத் நிலநடுக்கத்திற்குப் பிறகு, நான் கேள்விப் பட்ட மிகப் பெரிய இயற்கை சீற்றம் இதுதான். அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த வீட்டில் , பொங்கலை முன்னிட்டு , வெள்ளை அடிக்கும் பனி இருந்து கொண்டிருந்தது. நானும் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வந்திருந்தேன். முதன் முதலில்,காலை எட்டு மணிக்கு சன் டி.வி யில் தான் ' பிளாஷ் ' நியூஸ் போட்டார்கள். " சென்னையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது . நூற்றுக் கணக்கான மக்களை காண வில்லை " என்று. பிறகு ஆழிப் பேரலை என்று அறிவித்தார்கள். ஒரு நாள் கழித்துதான் , தொலைக் காட்சிகளில் ' சுனாமி ' என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தினார்கள். சுமத்ரா தீவில், ஏற்பட்ட நில நடுக்கம் தான் சுனாமிக்கு காரணம் என்றும் அறிவித்தனர்.

இந்தோனேசியா , இலங்கைக்கு பிறகு , சுனாமியால் அதிகம் பாதிக்கபட்ட நாடு, இந்தியாதான். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும், சுனாமியால் இந்த அளவு பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் மொத்த உயிரிழப்பு ஐந்து ஆயரதிற்கும் குறைவுதான் என்று சட்டப் பூர்வமாக அறிவித்தாலும், மொத்த உயரிழப்பு , பத்தாயிரத்தைத் தொடும் என்று கூறப் படுகிறது.

உயிரிழப்புகளைத் தாண்டி உலகம் சந்தித்த பாதிப்புகள், ஏராளம். உடல் ஊனமுற்றவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலுக்கான ஆதாரங்களை இழந்தவர்கள் என்று அந்த பட்டியல் நீள்கிறது. ஆனால் , அப்போதும் , இறந்தவர்களின் உடம்பிலிருந்து , நகைகளைத் திருடிய சம்பவங்களும் நடந்தன . இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளிலும், சுனாமியால் பாதிப்படைந்தவர்கள் தங்களுக்கான நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதைக் காண முடிகிறது !

நான் கல்லூரி படிக்கும் போது, எங்கள் கல்லூரி சார்பில் வெளியிடப் பட்ட ஒரு புத்தகத்தில், நான் எழுதிய ஒரு கவிதையை ( ! ) பிரசுரம் செய்தார்கள்.

-------------------------------------------------------------------------
காடு மேடு வாங்கியவர்களிடம் காசு வாங்கினால் - பினாமி ,
காற்று வாங்க வந்தவர்களை காவு வாங்கினால் - சுனாமி .
-------------------------------------------------------------------------

இதைப் படித்த எனது நண்பர்கள், இது வேறு யாரோ எழுதியதைப் போல் உள்ளதாகவும், ஏற்கனவே எங்கோ படித்த ஞாபகம் இருப்பதாகவும் கூறினார்கள். உங்களுக்கு எப்படி ? எதற்கும் இந்த பக்கத்தின் மேலே உள்ள , ' டிஸ்க்ளைமர் ' ஐ, ஒருமுறை படித்து விடவும்.


Sunday, December 20, 2009

கலைஞருக்கு தமிழ்த் தலை மகன் விருது...
இன்று மாலை , நண்பனுடன் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்றிருந்தேன் (ஆ ... ஊ.. ன்னா கெளம்பிர்றாங்க.... ! ) . கலைஞருக்கு , கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ' தமிழ்த் தலை மகன் ' விருது வழங்கும் விழா.

துணை முதல்வர், மத்திய - மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கட்சிக் காரர்கள் , தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், பத்திரிக்கை - ஊடகப் பணியாளர்கள் ,பொது மக்கள் என எல்லோரும் வந்திருந்தும், ஏனோ கூட்டம் குறைவாகவே இருந்தது . விழாவிற்கு , அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமை ஏற்பதாக இருந்தது. அனால் உடல் நலம் குன்றியதால் அவர் வரவில்லை. திரு . வா. செ . குழந்தைசாமி தலைமை ஏற்றார். நடிகர் சிவகுமார், கவிப் பேரரசு வைரமுத்து , முனைவர் . அவ்வை நடராசன், திரு. குமரி அனந்தன் ஆகியோர் கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மூன்று மாதங்களில் , கலைஞருக்கு நடைபெறும் நான்காவது பாராட்டு விழா இது. வழக்கம் போல், வைரமுத்து , கலைஞரைப் பாராட்டித் தள்ளி விட்டார்.பதிலுக்கு கலைஞரும் ! சிவகுமார் பேச ஆரம்பித்த உடன் , ஏனோ தெரியவில்லை , விசில்கள் பறந்தன . விழாவின் இறுதியில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் உண்டாக உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தனர் . ஏற்புரையில், கலைஞர் , கொல்கத்தா மட்டுமல்ல - எங்கெல்லாம் தமிழ்ச் சங்கங்கள் கஷ்டப் படுகின்றனவோ , அவை எல்லாவற்றிற்கும் இந்த அரசு உதவி செய்யும் என்றார். மேலும் தன்னுடைய உதவியாளர் சண்முக நாதனைப் பற்றியும் நெகிழ்ந்து பேசினார். கலைஞர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் கொஞ்சம் பேர் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களை, சிலர் போக வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தனர். முதல் முறையாக கலைஞர் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது.

நிகழ்ச்சியை திருமதி.பர்வீன் சுல்தானா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அநேகமாக, கலைஞர் தொலைக் காட்சியில் இந்த விழா ஒளிபரப்பாகும் . விழா முடிந்து , எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்கும் போது , நானும் நண்பனும் , திரு . குமரி அனந்தன் அவர்களை சந்தித்து பேசினோம். மிகவும் கனிவாக பேசினார் - எளிமையான மனிதர். எங்கள் விருப்பப் படி , அவருடன் புகைப் படம் எடுக்கவும் இசைந்தார். என் நண்பனும், திரு. குமரி அனந்தனும் இருக்கும் படம் தான் , மேலே உள்ளது ! மேலும் திருமதி . பர்வீன் சுல்தானாவையும் சந்தித்து பேசினோம் . ஆனால் அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்ற வில்லை !

என்னைப் பொறுத்த வரை, கலைஞருக்கு தமிழ்மொழி தொடர்பாக எந்த விருது கொடுத்தாலும் , அதற்கு அவர் தகுதி உடையவரே!


Thursday, December 17, 2009

புதிய பதிவு போடுவது எப்படி ?

முன்குறிப்பு : இது , சும்மா , விளையாட்டுக்கு நான் போடும் பதிவாகும். சீரியசான பதிவர்கள் இதைப் படித்துவிட்டு என் மேல் கடுப்பாக வேண்டாம். இதை ஒரு புதிய பதிவரின் ஆர்வக் கோளாறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் போல் வலைதளங்களும் மக்கள் அதிகம் புழங்கும் மீடியாவகும். எனவே இதை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

கூகிள் புண்ணியத்திலோ அல்லது வேர்டு பிரெஸ் புண்ணியத்திலோ ஒருவழியாக, ஒரு இலவச பிளாக் வெகு சுலபமாக கிடைத்து விடுகிறது. ஆனால், கல்யாண பந்தியில் , அளவு தெரியாமல் நிறைய சாப்பாடு வாங்கிக் கொண்டு, கடைசியில் சாப்பிட முடியாமல் முழிப்பதை போன்று, ஒரு புதிய பதிவு போட முழித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பதிவு இது.

புதிய பதிவு போட என்னால் முடிந்த சில யோசனைகள் :

>> மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு, தினமும் பல ' பார்வார்ட் ' மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் ஏதாவது ஒன்றை , புது பதிவாக போட்டு , இறுதியில் நண்பன் மெயில் பண்ணியது என்று பின் குறிப்பிடலாம்.

>> ஏதாவது , ஒரு பத்திரிகை செய்தியை அப்படியே போட்டு கடைசியில் அந்த பத்திரிகைக்கு நன்றி கூறலாம்.

>> உங்கள் மொபைல் போனில், நீங்கள் எப்போதோ எடுத்த பழைய புகைப்படங்களை போட்டு 'ஆட்டோகிராப் ' என்று தலைப்பிடலாம்.

>> நீங்கள் ஏற்கனவே பிரசுரம் செய்த பதிவை ' மீள் பதிவு ' என்று புது தலைப்பு போட்டு புது பதிவாக கணக்கில் ஒன்று அதிகரிக்கலாம்.

>> சக பதிவர்களின் பதிவையோ அல்லது புதியதாக வெளியிடப்பட்ட புத்தகங்களையோ அல்லது நீங்கள் பார்த்த திரைப்படங்களையோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று புது பதிவிடலாம். மதிப்பெண்கள் கூட வழங்கலாம்.

>> உங்களின் பயணங்களை ஒரு ' பயணக் கட்டுரை ' யாக சில படங்களுடன் வெளியிடலாம்.

>> அரசு இயந்திரத்தின் குளறு படிகள், சமூக அவலங்கள் போன்றவற்றை சற்றே கார சாரமாக எழுதலாம். முடிந்த வரை கெட்ட வார்த்தைகளை தவிர்த்தல் நலம்.

>> சில சமையல் குறிப்புகளை அவற்றின் படங்களுடன் போடலாம். நீங்கள் அந்த உணவை செய்து பார்த்துதான் குறிப்புகளை சொல்ல வேண்டும் என்று இல்லை.

>> அல்லது , ' புதிய பதிவு போடுவது எப்படி ? ' என்பதைப் போல , சில யோசனைகளைப் பட்டியலிடலாம். பட்டியல்களுக்கு தேவையான யோசனைகளுக்கு இதைப் போன்ற வலைத் தளங்களின் பதிவுகளை ஒருமுறை வாசித்தால், உங்களுக்கே ஒரு ' ஐடியா ' கிடைக்கும்.


பின் குறிப்பு : முன்குறிப்பை இன்னொரு முறை படிக்கவும்.


Friday, December 11, 2009

முக்கிய நிகழ்வுகள் 2009

இனிதே ( ? ! ) முடியப் போகிறது இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு. பிறகென்ன ? இனிமே எல்லாரும் , டாப் டென் நிகழ்வுகள், விருதுகள் என்று கிளம்பி விடுவார்கள். அந்த வகையில் , என்னைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளாக நான் நினைக்கும் ( மொத்தம் பத்துதான் என்றில்லை ! கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஏன் ? பத்துக்கும் மேலான அல்லது குறைவான, முக்கிய நிகழ்வுகள் இருக்கக் கூடாதா என்ன ? ) .

குறிப்பு: இங்கு குறிப்பிடப் படும் வரிசைக்கும் - நிகழ்வின் முக்கியத் துவத்திற்கும் சம்பந்தம் இல்லை !

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :

இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான். ஏற்கனவே சரிந்து கொண்டிருந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமை , இந்திய நிறுவனங்களையும் சற்றே ஆட்டம் காண வைத்த நேரம் பார்த்து, சத்யம் ராம லிங்க ராஜு ஒரு பெரிய குண்டைப் போட்டார். தன் நிறுவனக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை , பொய்க் கணக்கு மூலம் சேர்த்ததாக கூறியதின் மூலம் , இந்திய நிறுவனகளின் நம்பகத் தன்மையை சோதனைக்குள்ளாக வைத்தார். இந்திய அரசாங்கம் தலையிட்டு , குழுவெல்லாம் அமைத்து , பிரச்சினையை தீர்க்க முயன்றார்கள். ராஜூ கைது செய்யப் பட்டார். ஆயினும் ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே , தகவல் தொழில் நுட்பத் துறையும், சத்யம் ( தற்பொழுது மகிந்திரா சத்யம் ) நிறுவனமும் மீண்டு வருவதைப் போல தோன்றுகிறது. வாழ்த்துக்கள் !
(இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை !) .

பன்றிக் காய்ச்சல் :

முதலில் , மெக்ஸிகோவில் இருப்பதாகக் கருதப் பட்ட இந்த நோய் , பிறகு அமெரிக்கா , ஐரோப்பா , ஆசியா என்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பல உயிர்களுக்கு கண்டம் வைத்தது ! எங்கெங்கு நோக்கினும் முகமூடி அணிந்த மனித முகங்கள் ! பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு முகமூடி , நூறு ரூபாய் வரைக்கும் விற்கப் பட்டது. ( ஒருவேளை இப்படி விற்பவர்களையும் முகமூடிக் கொள்ளைக் கார்கள் என்று அழைக்கலாம் ?! ) இந்தியாவைப் பொறுத்த வரை , புனேவைச் சேர்ந்த ஒரு சிறுமிதான் , இந்த காய்ச்சலுக்கு முதல் பலி என்று அறியப் பட்டது. அதன் பிறகுதான் , நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மின்னல் வேகமெடுத்தன. ' இந்த சிறுமியால் தான் நோய் பரவியது ' என்று மத்திய சுகாதார மந்திரி குலாம் நபி ஆசாத் சொல்லி , பிறகு சொன்ன வேகத்திலேயே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் ! இன்னமும் இந்த வியாதிக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை. பாதிக்கப் படுபவர்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் !


இலங்கைத் தமிழர் படுகொலைகள் :

கடந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப் பட்ட , விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை , இலங்கை அரசு தீவிரப் படுத்தியது இந்த ஆண்டில் தான். உலகெங்கிலும் , இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. சர்வதேச அளவில் , ' போர் விதிகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை ' என்ற புகார்களை புறந்தள்ளி, ஏப்ரல் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்த ' போர்' ஒரு வழியாக , மே மாதம் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கின்றன, புள்ளி விபரங்கள் . போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகக் கூறி அவரது சடலத்தையும் காண்பித்தார்கள். ஆனால் இன்னமும் அவரது மரணம பற்றியக் குழப்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன , அல்லது ஏற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் , இன்று வரை , முகாம்களில் உள்ள தமிழர்களை மீள் குடியேற்றம் செய்து கொண்டுதானிருக்கிறது இலங்கை அரசாங்கம். ஜனவரிக்குள் இந்த பணி முடிவடைந்து விடும் என்று கூறியிருக்கிறார் ராஜ பக்ஷே. இதே ஜனவரியில் தான் , அதிபர் தேர்தலும் நடக்கவிருக்கிறது இலங்கையில் ! ஆனால், போர்த் தளபதி ' பொன்சேகோ ' , இப்போது ராஜ பக்ஷேவுக்கு எதிரணியில் !

இந்திய பாராளுமன்றத் தேர்தல் :

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் , இந்தியாவில் நடை பெற்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் , உலகம் முழுவதும் கவனிக்கப் பட்ட ஒன்றாகும். நூற்றி சொச்சம் கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தில் , அனைத்து ஒட்டு சாவடிகளிலும், மின்னணு சாதனங்களைப் பயன் படுத்தி ஓட்டுப் பதிவு நடத்தியதை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு , நான்காவது , ஐந்தாவது அணிகள் உண்டான தேர்தல் இது ! கடைசியில் , டாக்டர்.மன்மோகன் சிங் ( சோனியா !?) மகத்தான வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் முதல் மரியாதை பெற்ற தி.மு.க விற்கு , இந்த முறை பந்திக்கு கூட அழைப்பில்லை. தேர்தல் சமயத்தில் , இலங்கை தமிழர் பிரச்சனை , சுவிஸ் வங்கி கருப்பு பணம் போன்றவை விஸ்வ ரூபம் எடுத்து , பிறகு புஸ்வாணமாகி போயின !

வை . எஸ் . ராஜ சேகர ரெட்டி :

இந்த ஆண்டில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வுகளில் முக்கியமானது , திரு . ராஜசேகர ரெட்டின் மறைவு . கர்னூல் மாவட்டத்திற்கு திடீர் ஆய்வு செய்ய கிளம்பியவர் , போய் சேர வேண்டிய நேரம் ஆகியும் , போய் சேராதது , பரபரப்பின் ஆரம்பம். முதலில் ஹெலிகாப்டர் காணவில்லை என்றார்கள். தேடுதல் பணியில், இதுவரை இந்தியா பார்த்திராத அளவிற்கு உபகரணங்களும், ஆட்களும் பயன் படுத்தப் பட்டன. ஒருவேளை நக்சலைட்டுகளின் சதியாக இருக்கலாமோ என்று வலுத்த சந்தேகம், இரண்டு நாட்கள் தேடுதலின் முடிவில் ரெட்டியின் (மற்றும் அவர் உதவியாளர்களின் ) உடல் பாகங்களை நல்லமல்லா காட்டுப் பகுதயில் கண்டெடுத்த பின் ஓய்ந்தது. ரெட்டியின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது . ஆந்திர காங்கிரசுக்கு மட்டுமல்ல , தேசிய காங்கிரசுக்கே ஒரு பேரிழப்பாக இருக்கும் இந்த மறைவு .

தனித் தெலுங்கானா :

இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் , தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி யின் தலைவர் சந்திர சேகர ராவ் , ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா என்று தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கூறி , உண்ணாவிரதம் ஆரம்பித்தார். வழக்கம் போல் மீடியாகளின் உதவியுடன் உண்ணாவிரதம் பெரிதாக்கப் பட்டு , மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது ! கிட்டத் தட்ட இருநூறு பேருந்துகள் நாசம் செய்யப் பட்டன. பத்து நாட்கள் முடிவதற்குள்ளாக, ராவிற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை இருபதை எட்டியது என்று செய்தி. கடைசியில், ஆந்திராவை பிரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது மத்திய அரசு. இதைக் காரணம் காட்டி , இன்னும் ஒன்பது புது மாநிலக் கோரிக்கைகள் புத்துயிர் ஊட்டப் பட்டுள்ளன. இது போன்ற உண்ணாவிரதங்களுக்கு பயந்து மாநிலங்கள் பிரிக்கப் பட்டால் , இந்திய மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை , ஐம்பதைத் தொட்டு விடும். இந்த இடத்தில் , உங்களுக்கு ஒரு பொது அறிவுக் கேள்வி ! தற்போது இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் எத்தனை ? ( தெலுங்கானாவைக் கணக்கில் கொள்ளாமல் ! )


மர்மக் காய்ச்சல்...
ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. ' மர்மக் காய்ச்சல் ' ஆல் பாதிக்கப் பட்டு, கிட்டத் தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு புதிய பதிவு போடலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்.

அதுக்கு முன்னாடி , மர்மக் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் விளைவுகளைப் பற்றி சொல்லி விடுவது உத்தமம் என்று நினைக்கிறேன். முதல் நாள் காலையில் - ஒரு கால் முட்டியில், வலி ஆரம்பிச்சது. அன்னைக்கு மதியம் - லேசான காய்ச்சல் , சாயந்தரம் - ஜாயின்ட் பெயின் என்று , ஒரே நாளில் ' மர்மம் ' பரவ ஆரம்பிச்சுடிச்சு.

மாலையில் ஆபீஸ் முடிந்து வரும் வழியில் , ஒரு டாக்டரைப் பார்த்தேன். அநேகமாக வைரஸ் காய்ச்சலாக இருக்கும் என்றார். ( நல்ல வேளை , ' எதையும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்துதான் சொல்ல முடியும் ' என்று கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு சொல்லவில்லை. ஏனென்றால் , அவர் கண்ணாடி போடவில்லை ! )

ஒரு வாரம் ஆகியும் மர்மக் காய்ச்சலின் பாதிப்புகள் குறைந்த பாடில்லை. இன்னும் முட்டிகளில் வலியும் லேசான தலை வலியும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது கொசுவின் மூலமாகப் பரவக் கூடியதுதான் என்றும் சொல்கிறார்கள். ஆகவே மக்களே, கொசுவிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லது ரெண்டு , மூணு நாட்கள் ஆபிஸிற்கு லீவு போட வேண்டியிருக்கும் ! ஆபீசிலும் ஒருத்தருக்கு இதே போன்று காய்ச்சல் வந்திருந்தது.

மேலும் நான் பாதிக்கப் பட்டிருந்த நாள் முதலே, வீட்டிலும் இரண்டு பேருக்கு வந்துவிட்டிருந்தது. மருத்துவர்களும் முன்பு போல் இப்பொழுது இல்லை , நம்மை வைத்துதான் சோதனை செய்து கொள்கிறார்கள். ஒருவேளை இப்படி இருக்குமோ - ஒருவேளை அப்படி இருக்குமோ என்று !

இப்படியாக மர்மம் பரவிக் கொண்டிருக்கும் போதே, தொலைக் காட்சிகளில் சேதி வாசிக்கிறார்கள் - ' மர்மக் காய்ச்சலுக்கு சென்னையில் ஐந்து வயது சிறுமி பலி ' என்று. இன்னமும் பன்றிக் காய்ச்சல் பீதியும் குறைந்த பாடில்லை. சிக்குன் குனியாவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது . ஆகவே , டேக் கேர் . உங்களுக்காக இல்லாவிட்டாலும் , உங்களை நம்பி இருக்கும் ஜீவன்களுக்காகவாவது .

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *