Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Sunday, January 10, 2010

சென்னை புத்தகக் காட்சி...



இன்று மாலை நானும் என் நண்பனும் முப்பத்தி மூன்றாவது ( எப்படி நம்பரை டைப் பன்றதுன்னே தெரியல. நம்பர் டைப் பண்ணினாலும் , அது தமிழ் நம்பரா மாறிடுது. ஒவ்வரு முறையும் வார்த்தைகளாலேயே சொல்ல வேண்டியது இருக்கு ! ) சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். போன முறை கூட வந்த ஒருவன் , இந்த முறை கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டான்.

மூன்று மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு, இந்திய நேரப் படி நான்கு மணிக்குதான் காட்சி வளாகத்தினுள் சென்றேன். போன முறை , போகும் போதே ,
எஸ். ராமகிருஷ்ணனின் புத்தகங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றுதான் சென்றேன். அனால் இந்த முறை அப்படி இல்லை. போன முறை வாங்கிய புத்தகங்களில் இரண்டை மட்டுமே படித்தேன் . இன்னொன்று ஆறு மாதங்களாய் தொடப் படாமலே இருக்கிறது !

கடந்த வாரம் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தும், சில ஆணிகள் பிடுங்கப் பட வேண்டி இருந்ததாலும், ' கம்பேனி ' க்கு ஆள் இல்லாததாலும், போகவில்லை. இன்றும் போகாமல் இருந்தால், ஒரு புதிய பதிவு போட முடியாமல் போய் விடும் என்பதால், ஒருவழியாக, இன்று போயே விட்டேன். கிட்டத் தட்ட ஆறுநூறு ஸ்டால்கள் இருந்தன. நண்பனுக்கு ஆயிரம் ரூபாயும் , எனக்கு ஐநூறு ரூபாயும் பட்ஜெட் !

பாதி சுற்றி முடிப்பதற்குள்ளாகவே, நண்பன் ' உச்ச வரம்பை ' நெருங்கி விட்டிருந்தான். நான் சில பதிப்பகங்களில் இரண்டு மூன்று புத்தகங்களை பார்த்து வைத்திருந்தேன். பின் என்னுடைய ' உச்ச வரம்பிற்குள் ' , மனதுக்கு பிடித்தமான இரண்டு கதாசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பினை வாங்கி வந்தேன்.

இந்த புத்தகக் காட்சியில் சில பிரபலங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பும் , பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குனர்கள் திரு.சேரன், திரு . பால சந்தர், எழுத்தாளர் சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், உதய சந்திரன் இ.ஆ.ப, திரு . பழ.நெடுமாறன்,
நடிகை சுகன்யா போன்றோர் வந்திருந்தனர். என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவரைக் கூட இன்று புத்தகக் காட்சியில் பார்த்தேன்.

உயிர்மை பதிப்பகத்தில் , சாரு நிவேதிதாவும் , மனுஷ்ய புத்திரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சாருவின் பத்து புத்தகங்கள் தொகுப்பை வாங்குபவர்களுக்கும் , மேலும் கேட்பவர்களுக்கும் ஆட்டோ கிராப் போட்டுக் கொண்டிருந்தார் சாரு . விகடன் பிரசுரத்தில் வழக்கம் போல் கூட்டம். நக்கீரன் பதிப்பகமும் பிரம்மாண்டமாக அரங்கு அமைத்திருந்தனர். கடைசி நாள் என்பதால், கூட்டமும் அதிகம் !

பாதி சுற்றி முடிப்பதற்குள் , உடல் அலுப்பு கண்டு விட்டது ! மீதியை அடுத்த புத்தகக் காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தோம். அடுத்த முறையாவது ' உச்ச வரம்பை ' உயத்திக் கொண்டு போக வேண்டும் ! மக்கள் , எழுத்தாளர்களின் பெயரைக் சொல்லி , அவர்களின் புத்தகங்கள் இருக்கிறதா ? என்று கேட்பதை பார்க்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் சரி , இந்த பதிவின் ஜென்ம சாபல்யம் இன்னும் சொல்லப் பட வில்லையே ?

நான் வாங்கிய இரண்டு புத்தகங்கள் ,

>>> கி. ராஜ நாராயணன் கதைகள்.
வெளியீடு : அகரம் .
விலை : ருபாய் இருநூறு .
( பத்து சதவீதம் தள்ளுபடி போக, ருபாய் நூற்றி எண்பது ).

>>> புதுமைப் பித்தன் கதைகள்.
வெளியீடு : புதுமைப் பித்தன் பதிப்பகம்.
விலை : ருபாய் முன்னூற்றி ஐம்பது.
(பத்து சதவீதம் தள்ளுபடி போக , ருபாய் முன்னூற்றிப் பதினைந்து ) .


இந்த பதிவுக்காக , புத்தகக் காட்சியில் ஒரு புகைப் படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அனால் , கடைசி நேர அவசரத்தில் மறந்து விட்டேன்.

புகைப்படம் உபயம் : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்சங்கம்.


Sunday, October 18, 2009

சொர்க்கமே என்றாலும்...

டிஸ்கி : இது போன தீபாவளிக்கு நான் எழுதிய இடுகை .
அப்போது பல திரட்டிகளில் இணைக்கவில்லை . இப்போது இணைக்கிறேன் !
(ஏதோ நானும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற நினைப்பில்  எழுதிய இடுகை இது ! )



இந்த முறை தீபாவளி சென்னையில் தான்.
இதுதான் முதல் முறை கூட.

எனக்கு தெரிந்து பண்டிகைகளின் உண்மையான வாசத்தை கிராமங்களில் தான் நுகர முடிகிறது. பிழைப்பிற்காக சென்னை வந்த அனைவரும் இதை வழிமொழிவார்கள் என்றே எண்ணுகிறேன்.

இன்றும் சாதாரண விடுமுறை நாட்களை விட, பண்டிகை விடுமுறை நாட்களில் வெளியூர்ப் பேருந்துகளில் செல்வோரின் கூட்டம் சற்றே அதிகமாக இருக்கிறதைப் பார்க்க முடிகிறது. (மற்ற எந்த நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாதவர்களும் இது போன்ற பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஊர் செல்ல விரும்புகின்றனர் ?)

இதை எப்படி எடுத்துக் கொள்வது?
இவ்வாறானவர்களை அவர்களின் ஊர் அழைக்கிறதா? அல்லது சென்னை அவர்களை விரும்புவதில்லையா?அல்லது அவர்கள் சென்னையை விரும்புவதில்லையா? என்றால் இத்தனை நாள் எப்படி அவர்கள் இங்கிருந்தார்கள்?

மாநகரமானது , மனிதர்களை மாற்றிவிடுவது போல, பண்டிகைகளையும் மாற்றி விடுகிறது போலும் ! அல்லது மனிதர்கள் இடத்திற்கு இடம் மாறுவதைப் போல,பண்டிகைகளும் தன் இயல்பை மாற்றிக் கொள்கின்றன !

நான் பால்யத்தில் கண்ட தீபாவளிக்கும் , இப்போது காணும் தீபாவளிக்கும் உள்ள வித்தியாசங்கள் மிக அதிகம்.அன்று புதுத் துணிக்கும், பட்டாசுக்கும் , இனிப்பு,காரங்களுக்கும் ஏங்கிய மனது இன்று அவற்றை ஏற்க மறுக்கிறது, அல்லது கூச்சம் கொள்கிறது.என்றால் , வயதுதான் பண்டிகைக் கொண்டாட்டங்களை தீர்மானிக்கிறதா? ஆனால், இன்றும் நாற்பது ஐம்பது வயதுகளிலும் புதுத் துணியுடன் பட்டாசு வெடிப்பவர்களை காண முடிகிறதே?
அவர்கள் ஏன் கூச்சம் கொள்வதில்லை? (ஏன் கூச்சம் கொள்ள வேண்டும் ?) .
அவர்கள் இன்னும் பால்யத்தின் கரைகளில் இருந்து வெளிவர விருப்பமற்றவர்களா?

ஒவ்வொருவருள்ளும் பால்யமானது தனது இருத்தலை பண்டிகைகள் மூலம் வெளிப்படுத்த முயன்று கொண்டுதானிருக்கிறது .வெகு சிலரே அதை அனுமதிக்கிறார்கள். பண்டிகை முடிந்தவுடன், அவர்கள் மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்புவது போலவே, தம் வயதிற்கும் திரும்புகின்றனர்.


அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் !







மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...