
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் , நிறைய போராட்டங்களுக்கும் பிறகு , ஒரு வழியாக இந்த பொங்கலன்று "ஆயிரத்தில் ஒருவன்" ரிலீஸ் ஆகிவிட்டது. நேற்று இரவே, என் நண்பன் படத்திற்கு போயிட்டு வந்து , 'கதையே புரியலடா' ன்னு சொல்ல ஆரம்பிச்சான். ஆனா அவன்கிட்டயும் 'கதை புரியலன்னாலும் பரவால்ல , என்கிட்டே சொல்லாத' ன்னு , நம்ம கொள்கையை ( ! ) நிலை நிறுத்தி விட்டு , இன்று பிற்பகல் ஷோவிற்கு சென்றேன். எங்கயா ? வழக்கம் போல திருவான்மியூர் தியாகராஜாவிற்குதான் !
கேட்டிற்கு வெளியே , டிக்கெட்டை பிளாக் கில் விற்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை , கவுண்ட்டரில் டிக்கெட் கிடைக்காதோ என்று உள்ளே போனால் , கவுண்ட்டரில் கூட்டமே இல்லை ! ஆனால் நாற்பது ருபாய் டிக்கெட்டை, தியேட்டர் காரர்களே நாற்பத்தைந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளை , நான் உள்ளே போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை. சில பல விளம்பரங்களுக்குப் பிறகு இனிதே படத்தை ஆரம்பித்தார்கள்.
என்னுடைய விமர்சனங்களில் , படத்தின் கதையை ஒருபோதும் சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இதுவரையும் அப்படித்தான். படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே , திரைக்கதை , வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. காடுகளும், ஆபத்துகளும் நிறைந்த பாதை அது. இதுவரை , தமிழ் சினிமா பயணிக்காத பாதையும் கூட ( எனக்குத் தெரிந்து ) ! இப்படி ஒரு படத்தைத் தயாரிப்பதற்கு , முன்வந்த தயாரிப்பாளர் மிகவும் பாராட்டிற்கு உரியவர்.
கார்த்தி யின் இரண்டாவது படமிது ! அவ்வளவாக வசனங்களுக்கு வேலையில்லாததால் , வசனம் பேசும் சில இடங்களிலும் ' பருத்தி வீரன் ' வெளிப்படுகிறான். ஆண்ட்ரியாவும் , ரீமாசென்னும் கார்த்திக்கு சமமான கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு கிராபிக்ஸ் உதவி இருக்கிறது. ஆனால் , இயல்பான காட்சிகளுடன் பொருந்தி விடுவதால் சுவாரஸ்யம் குறைவதில்லை !
ராம்ஜி யின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரும் பலம். வெவ்வேறு காலங்களில் , பயணிக்கும் கேமரா , நம்மையும் அந்தந்த காலங்களுக்கு கூட்டிச் செல்கின்றது. ராம்ஜிக்கு ' ஆயிரம் பொற்காசுகள் ' பரிசளிக்கலாம். அடுத்த படியாக, ஜி. வி . பிரகாஷ் குமார் ! செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் , வேதியியல் ( அட , கெமிஸ்ட்ரி தாங்க) இந்த புதிய கூட்டணிக்கும் இருக்குமா என்று கேட்டவர்களுக்கு, நல்ல பதில் சொல்லியிருக்கிறார் ஜி.வி ! வாழ்த்துக்கள் !
இந்த கூட்டணி , " மாலை நேரத்து மயக்கம் " வரை தொடர்கிறது.
அப்புறம் , பார்த்திபனைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே ?! என்னத்த சொல்றது , நீங்களே படத்துல பாருங்க. பிரமாதம். முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில், தனுஷ் இருப்பதாக இருந்தது. நல்ல வேளை , தனுஷ் தப்பித்தார் ! நாமும் !! அந்த இடத்தில் , தனுஷை கற்பனை செய்து பார்ப்பதே சற்று கடினமானதாக இருக்கிறது.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது , அருகில் என் இருந்த ஒருவர் " ஓம் மேல ஆசைதான் " பாடலை , தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது , திரையரங்க ஊழியர்கள் வந்து செல்போனை 'பறி'முதல் செய்தனர். இந்த நேர்மை , டிக்கட் கவுண்ட்டரிலும் இருந்திருந்தால் பரவாயில்லை !
நண்பன் சொன்னது போல் , எனக்கும் கதை முழுமையாக புரியவில்லை. அதனால் என்ன ? இசையைப் புரிந்திராதவர்கள் கச்சேரிகளுக்குப் போவதில்லையா ? சில விஷயங்களுக்கு புரிதலைக் காட்டிலும் , பிடித்தல் தான் முக்கியம்.
எல்லாம் சரி , படம் எப்படி ?
என் பக்கத்துக்கு சீட்டில் இருந்தவர் அடித்த கமன்ட் -
" ங்கோ ...... படத்த என்னமா எடுத்திருக்காண்டா !!! ".
என் கருத்தும் கிட்டத் தட்ட இதைப் போன்றதுதான் !