Friday, December 11, 2009

முக்கிய நிகழ்வுகள் 2009

இனிதே ( ? ! ) முடியப் போகிறது இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு. பிறகென்ன ? இனிமே எல்லாரும் , டாப் டென் நிகழ்வுகள், விருதுகள் என்று கிளம்பி விடுவார்கள். அந்த வகையில் , என்னைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளாக நான் நினைக்கும் ( மொத்தம் பத்துதான் என்றில்லை ! கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஏன் ? பத்துக்கும் மேலான அல்லது குறைவான, முக்கிய நிகழ்வுகள் இருக்கக் கூடாதா என்ன ? ) .

குறிப்பு: இங்கு குறிப்பிடப் படும் வரிசைக்கும் - நிகழ்வின் முக்கியத் துவத்திற்கும் சம்பந்தம் இல்லை !

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :

இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான். ஏற்கனவே சரிந்து கொண்டிருந்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமை , இந்திய நிறுவனங்களையும் சற்றே ஆட்டம் காண வைத்த நேரம் பார்த்து, சத்யம் ராம லிங்க ராஜு ஒரு பெரிய குண்டைப் போட்டார். தன் நிறுவனக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை , பொய்க் கணக்கு மூலம் சேர்த்ததாக கூறியதின் மூலம் , இந்திய நிறுவனகளின் நம்பகத் தன்மையை சோதனைக்குள்ளாக வைத்தார். இந்திய அரசாங்கம் தலையிட்டு , குழுவெல்லாம் அமைத்து , பிரச்சினையை தீர்க்க முயன்றார்கள். ராஜூ கைது செய்யப் பட்டார். ஆயினும் ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே , தகவல் தொழில் நுட்பத் துறையும், சத்யம் ( தற்பொழுது மகிந்திரா சத்யம் ) நிறுவனமும் மீண்டு வருவதைப் போல தோன்றுகிறது. வாழ்த்துக்கள் !
(இது எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை !) .

பன்றிக் காய்ச்சல் :

முதலில் , மெக்ஸிகோவில் இருப்பதாகக் கருதப் பட்ட இந்த நோய் , பிறகு அமெரிக்கா , ஐரோப்பா , ஆசியா என்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து பல உயிர்களுக்கு கண்டம் வைத்தது ! எங்கெங்கு நோக்கினும் முகமூடி அணிந்த மனித முகங்கள் ! பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு முகமூடி , நூறு ரூபாய் வரைக்கும் விற்கப் பட்டது. ( ஒருவேளை இப்படி விற்பவர்களையும் முகமூடிக் கொள்ளைக் கார்கள் என்று அழைக்கலாம் ?! ) இந்தியாவைப் பொறுத்த வரை , புனேவைச் சேர்ந்த ஒரு சிறுமிதான் , இந்த காய்ச்சலுக்கு முதல் பலி என்று அறியப் பட்டது. அதன் பிறகுதான் , நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மின்னல் வேகமெடுத்தன. ' இந்த சிறுமியால் தான் நோய் பரவியது ' என்று மத்திய சுகாதார மந்திரி குலாம் நபி ஆசாத் சொல்லி , பிறகு சொன்ன வேகத்திலேயே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் ! இன்னமும் இந்த வியாதிக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை. பாதிக்கப் படுபவர்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் !


இலங்கைத் தமிழர் படுகொலைகள் :

கடந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப் பட்ட , விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை , இலங்கை அரசு தீவிரப் படுத்தியது இந்த ஆண்டில் தான். உலகெங்கிலும் , இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. சர்வதேச அளவில் , ' போர் விதிகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை ' என்ற புகார்களை புறந்தள்ளி, ஏப்ரல் மாதத்தில் உச்சக் கட்டத்தை அடைந்த ' போர்' ஒரு வழியாக , மே மாதம் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்தை தாண்டும் என்கின்றன, புள்ளி விபரங்கள் . போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகக் கூறி அவரது சடலத்தையும் காண்பித்தார்கள். ஆனால் இன்னமும் அவரது மரணம பற்றியக் குழப்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன , அல்லது ஏற்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் , இன்று வரை , முகாம்களில் உள்ள தமிழர்களை மீள் குடியேற்றம் செய்து கொண்டுதானிருக்கிறது இலங்கை அரசாங்கம். ஜனவரிக்குள் இந்த பணி முடிவடைந்து விடும் என்று கூறியிருக்கிறார் ராஜ பக்ஷே. இதே ஜனவரியில் தான் , அதிபர் தேர்தலும் நடக்கவிருக்கிறது இலங்கையில் ! ஆனால், போர்த் தளபதி ' பொன்சேகோ ' , இப்போது ராஜ பக்ஷேவுக்கு எதிரணியில் !

இந்திய பாராளுமன்றத் தேர்தல் :

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் , இந்தியாவில் நடை பெற்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் , உலகம் முழுவதும் கவனிக்கப் பட்ட ஒன்றாகும். நூற்றி சொச்சம் கோடி மக்கள் கொண்ட ஒரு தேசத்தில் , அனைத்து ஒட்டு சாவடிகளிலும், மின்னணு சாதனங்களைப் பயன் படுத்தி ஓட்டுப் பதிவு நடத்தியதை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு , நான்காவது , ஐந்தாவது அணிகள் உண்டான தேர்தல் இது ! கடைசியில் , டாக்டர்.மன்மோகன் சிங் ( சோனியா !?) மகத்தான வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் முதல் மரியாதை பெற்ற தி.மு.க விற்கு , இந்த முறை பந்திக்கு கூட அழைப்பில்லை. தேர்தல் சமயத்தில் , இலங்கை தமிழர் பிரச்சனை , சுவிஸ் வங்கி கருப்பு பணம் போன்றவை விஸ்வ ரூபம் எடுத்து , பிறகு புஸ்வாணமாகி போயின !

வை . எஸ் . ராஜ சேகர ரெட்டி :

இந்த ஆண்டில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வுகளில் முக்கியமானது , திரு . ராஜசேகர ரெட்டின் மறைவு . கர்னூல் மாவட்டத்திற்கு திடீர் ஆய்வு செய்ய கிளம்பியவர் , போய் சேர வேண்டிய நேரம் ஆகியும் , போய் சேராதது , பரபரப்பின் ஆரம்பம். முதலில் ஹெலிகாப்டர் காணவில்லை என்றார்கள். தேடுதல் பணியில், இதுவரை இந்தியா பார்த்திராத அளவிற்கு உபகரணங்களும், ஆட்களும் பயன் படுத்தப் பட்டன. ஒருவேளை நக்சலைட்டுகளின் சதியாக இருக்கலாமோ என்று வலுத்த சந்தேகம், இரண்டு நாட்கள் தேடுதலின் முடிவில் ரெட்டியின் (மற்றும் அவர் உதவியாளர்களின் ) உடல் பாகங்களை நல்லமல்லா காட்டுப் பகுதயில் கண்டெடுத்த பின் ஓய்ந்தது. ரெட்டியின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது . ஆந்திர காங்கிரசுக்கு மட்டுமல்ல , தேசிய காங்கிரசுக்கே ஒரு பேரிழப்பாக இருக்கும் இந்த மறைவு .

தனித் தெலுங்கானா :

இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் , தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி யின் தலைவர் சந்திர சேகர ராவ் , ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா என்று தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கூறி , உண்ணாவிரதம் ஆரம்பித்தார். வழக்கம் போல் மீடியாகளின் உதவியுடன் உண்ணாவிரதம் பெரிதாக்கப் பட்டு , மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது ! கிட்டத் தட்ட இருநூறு பேருந்துகள் நாசம் செய்யப் பட்டன. பத்து நாட்கள் முடிவதற்குள்ளாக, ராவிற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை இருபதை எட்டியது என்று செய்தி. கடைசியில், ஆந்திராவை பிரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது மத்திய அரசு. இதைக் காரணம் காட்டி , இன்னும் ஒன்பது புது மாநிலக் கோரிக்கைகள் புத்துயிர் ஊட்டப் பட்டுள்ளன. இது போன்ற உண்ணாவிரதங்களுக்கு பயந்து மாநிலங்கள் பிரிக்கப் பட்டால் , இந்திய மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை , ஐம்பதைத் தொட்டு விடும். இந்த இடத்தில் , உங்களுக்கு ஒரு பொது அறிவுக் கேள்வி ! தற்போது இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் எத்தனை ? ( தெலுங்கானாவைக் கணக்கில் கொள்ளாமல் ! )


0 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *