Sunday, April 11, 2010

பையா படமும் தலைப்பில்லாப் பதிவுகளும்... 11.04.2010

பதிவுலகப் பெரியவர்கள் எல்லாம் , வாரம் ஆனா , அவியல் ,குவியல்,டரியல்,மிக்சர்  ப்ரூட் , இட்லி தோசை வடை பொங்கல், கொத்து பரோட்டா என்று பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அதாவது , குறிப்பிட்டு ஒரு கருத்து என்றில்லாமல் கலந்து கட்டி எழுதும் பதிவு தான் இது போன்ற தலைப்புகளைப் பெறுகின்றது. நானும் இது  போன்று ஏதாவது எழுதலாம் என்று நினைத்து , அதற்கேற்ற தலைப்பினை தேடிப் பார்த்தேன். எதுவும் சரியாக கிடைக்க வில்லை. எனவே இப்போதைக்கு தலைப்பிலாப் பதிவுகள் என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைக்கிறேன். நல்ல தலைப்பு கிடைக்கும் போது மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம்.

****************************************************************

இன்று மதியம் திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரில் பையா திரைப்படம் பார்த்தேன்.
ஞாயிற்றுக் கிழமை மதியம் ஷோவிற்கு கூட நல்ல கூட்டம். ரெண்டு கவுன்ட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது.அரை மணி நேர காத்திருப்பிற்கு பிறகு, ஒரு கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்க மாட்டார்கள் என அறிவித்தார்கள். பிறகென்ன ? மொத்த கூட்டமும் ஒரே கவுண்ட்டருக்கு முண்டியடித்து கொண்டு சென்றோம். ஒருவழியாக பால்கனி டிக்கெட் கிடைத்து உள்ளே செல்வதற்குள் படம் போட்டு விட்டார்கள். ஆகையால், ஒரு வித ஏமாற்றத்துடனேயே படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கெல்லாம், "நன்றி - INDIAN OVERSEAS BANK , நன்றி - மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் " என்று ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து படம் பார்த்தாதான் ஒரு திருப்தி இருக்கும்.படம் எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.




வீட்டிலிருந்து தியேட்டர் வரை நடந்து தான் சென்றேன்.சரி, போகும் போது நண்பனுடன் பேசிக்கொண்டே போகலாம் என பேசினால், "படம் செம மொக்க மச்சி " ன்னு அவனுடைய விமர்சனத்தை சொன்னான். நம்ம கொள்கை படி, அதையும் மீறி படம் பார்த்திருக்கிறேன் என்பது , இந்த விமர்சனத்தை எழுதுகிறேன் என்றபோதே உங்களுக்கு புரிந்திருக்கும்.டிக்கெட் வாங்க லைனில் நின்று கொண்டிருக்கும் போது , BLACK இல் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞரைப்  பிடித்து, ' ஆபிஸ் ரூம்' க்கு கொண்டு போய் , நன்றாக 'கவனித்துக்' கொண்டிருந்தார்கள்.இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, எனக்கு திரையரங்க ஆட்களின் மீதுதான் கோவம் வருகிறது.



" இவ்வளவு சரியானவர்களாக இருக்கும் நீங்கள், உங்கள் விஷயங்களில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் ?!. BLACK டிக்கெட் விற்கும் இளைஞரை நான்கு பேராக சேர்ந்து கொண்டு அடிக்கிறீர்களே , திரையரங்க CANTEEN இல் நீங்கள் எவ்வளவு ஞாயமாக நடந்து கொள்கிறீர்கள் ? 15 ரூபாய் கூல்டிரிங்க்ஸ் 20 ரூபாய்க்கு விற்கும் (இது ஒரு உதாரணம் தான், எல்லா தின்பண்டங்களுக்கும் விலை கிட்டத்தட்ட 30 % அதிகம் வைத்துதான் விற்கிறார்கள் !) உங்களை , எத்தனை பேர் சேர்ந்து கொண்டு அடிப்பது ?"



"இவ்வளவு கேள்வி கேக்கறியே ? இதையெல்லாம், அங்கேயே அவர்களிடத்திலேயே கேட்டிருக்க வேண்டியதுதானே ?"  னு நீங்க கேக்கறது எனக்கு காதுல விழுது ! நான் என்ன பண்றதுங்க ?! என் வீட்டிற்கு நானே ஆட்டோவில் போகமாட்டேன். வேறு சிலர் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவதை நான் எப்படி ஏற்க முடியும் ?! அல்லது ' தாங்க ' முடியும் ?!



இந்த கருமத்தை எல்லாம் விட்டுத் தள்ளுங்க ,பையா எப்படி ?! விறு விறு திரைக் கதைக்கு பெயர் போன சாரி பெயர் எடுத்த இயக்குனர்  லிங்குசாமியின் இந்த படத்தில், முதலில் நயன் தாராவுடன் தான் கார்த்தி ஜோடி சேர்வதாக இருந்தது. சிலபல பிரச்சனைகளால் , தமன்னா ஜோடியானார். தமன்னா கார்த்தியின் காரில் ஏறும் போது , திரைக் கதையின் வேகமும் ஏறிவிடுகிறது. அதன் பிறகு , காரிலேயே பயணிக்கிறது மீதிக் கதை, வேகம் குறையாமல் ! ஆனால், ஒரே மாதிரி வெறும் மூன்று சண்டைக் காட்சிகள் சற்றே அயர்ச்சியூடுகின்றன . பாடல்களில் ஏற்கனவே பையா வெற்றிபெற்று விட்டான். தியேட்டரில் எதேச்சையாக என் நண்பனை பார்த்தேன். "பாட்டுக்காகவே ரெண்டாவது தடவ வந்துருக்கண்டா !"  என்றான் !



ஒளிப்பதிவாளர் மதி நிறைந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். பாடல்களை காட்சிப் படுத்திய விதத்திலும், சேசிங் காட்சிகளை எடுத்த விதத்திலும் ! படம் முழுவதும் காரில் பயணித்தாலும் , கண்களை உறுத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.வசனங்களும் நன்றாகவே வந்திருக்கின்றன. கார்த்திக் அடிக்கடி தத்துவங்கள் பேசுகிறார். மும்பை நண்பனாக வரும் ஜெகனும் நன்றாக நடித்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் செய்யும் போது , ஆனந்தம் , ரன் , சண்டக் கோழி , பீமா வரிசையில் என்று சொல்கிறார்கள் . ' ஜி ' யை மறைக்க முயற்சிக்கிறார்கள் ! ஏன் ? ஜி படம் வெற்றி பெறவில்லை என்பதாலா அல்லது இந்த படத்தை வாங்கிய  தயாநிதி அழகிரி படத்தில் நடிக்க, ' தல ' தாமதிப்பதாலா ? ( இது நானா யோசிச்சதாக்கும் ! )

பையா - நல்ல பையா !!!

****************************************************
இந்த வார காமெடி .....

நேற்றிரவு திருவான்மியூரில் , மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அக்கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்து கொண்டு 'கண்டனம்' தெரிவித்தார்.தனது பேச்சின் நடுவே அவர் சொன்ன  காமெடி..



ஒரு சலூன் கடையில் ஷேவிங் செய்வதற்காக ஒருவர் சென்றார். சலூன் கடைக் காரர் , சோப்பில் தண்ணீருக்கு பதிலாக எச்சிலைத் துப்பினார். கடைக்கு போனவர் கேட்டாராம் - "ஏம்பா இப்படி SOAP ல  எச்சிலைத் துப்பி ஷேவ் பன்றியே இது உனக்கே நல்லா இருக்கா ? "
சலூன் கடைக் காரர் சொன்னார் - "வெளியூர்க் காரங்களுக்கு இப்படித்தான் சார் SHAVE பண்ணுவோம் !". அதுக்கு அவர் சொன்னாராம் - "தம்பி நான் வெளியூர்க் காரன் இல்லை.உள்ளூர்க் காரன்தான் !" அதுக்கு சலூன் கடைக் காரர் சொன்னாராம் - "உள்ளூர்க் காரனா இருந்தா மூஞ்சிலேயே எச்சி துப்புவோம் , பரவால்லையா சார் ?!"

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...