Saturday, April 3, 2010

இந்த நூற்றாண்டின் முதல் மற்றும் கடைசி "திகில்" சம்பவம்.....

இன்று ஒரு அழகிய விடுமுறை ஞாயிறு. இருப்பினும், திருவல்லிக்கேணியின் குறுகிய சந்துக்களில் அதிகாலையிலேயே தொடங்கி விடும் இரைச்சல்கள், என்னை ஒரு நாள் கூட 6 மணிக்கு மேல் தூங்க விட்டதில்லை. இருந்தாலும், எனக்கு திருவல்லிக்கேணியில் தங்கி இருப்பது எனக்கு வெறுப்பைத் தந்ததில்லை ! (ஒரே) காரணம்? இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை ! ஷேக்ஸ்பியர்பி(ரி)யரில் இருந்து மஞ்சள் பத்திரிக்கைகள் வரை எந்த தலைப்பிலும் புத்தகங்கள் வாங்கலாம் ! ஆனால் என் மனைவி முதலில் திருவல்லிக்கேணி வருவதற்கே யோசிப்பாள்.ஆனால், இப்போது அப்படியில்லை ! நன்றாக பழகி விட்டாள்!



நான், எனது வழக்கமான ஞாயிறு காலை சிற்றுண்டியான - MAGGI நூடுல்சை முழுங்கி விட்டு, வழக்கம்போல ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு காய்கறி வாங்க கிளம்பினேன்.இது மாதிரியான சமயங்களை , புத்தகங்கள் வாங்குவதற்கும் நான் பயன் படுத்திக் கொள்வது வழக்கம்.ஆனால் என் பொண்டாட்டிக்கு புத்தகங்கள் அறவே பிடிக்காமல் போனதற்கு காரணங்கள் உண்டு ! புத்தகங்கள் ,இடம் அடைப்பவை, தூசி உண்டாகக் கூடியவை என்பாள் ! அதனால் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, "இன்னைக்கு வெறும் காய் கறி மட்டும் வாங்கிட்டு வாங்க , ஏற்கனவே மதனோட புக்ஸ் வைக்கறதுக்கே இடமில்ல , மதன் விளையாடக் கூட இடம் பத்த மாட்டேன்குது " என்று கத்தினாள் ! மதன், என் ஆறு வயது மகன் . "சீக்கிரம் வரப் பாருங்க - நீங்க வந்தப்புறம் தான் சமையல் செஞ்சு சாப்டனும். மதன் இன்னும் எழுந்திரிக்கல . எழும்போதே பசியோடதான் எழுந்திருப்பான்" - இது, வீட்ட விட்டு கிளம்பும் போது !



நான் வழக்கமாக செல்லும் , பழைய புத்தகக் கடைக்கே சென்றேன். புன்முறுவலுடன் என்னை வரவேற்று , புதிதாக வந்த பழைய புத்தகங்களை காட்டினார்.நான் போன வாரம் இதே கடையில் வாங்கின "Basics of Cryptology" என்ற புத்தகம் சற்று நன்றாக இருந்தது. எனவே, அது சம்பந்தமான வேறு புத்தகம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு முடிக்கும் முன்பாக, நான்கு புத்தகங்களை நீட்டினார். அவற்றுள் இரண்டை எடுத்துக் கொண்டு, 50 ரூபாயை கொடுத்து விட்டு நகர்ந்தேன்.



நான் வாங்கிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு .கண்ணகி சிலையருகே ஒரு ஓரமான இடம் தேடி ,ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து, ஒரு பாக்கெட் காரப் பொரியுடன் அமர்ந்தேன்.அந்த புத்தகத்திலிருந்து ஒரு PRINTOUT நழுவி கீழே விழ்ந்தது.எடுத்து பார்த்தால்- யாரோ - யாருக்கோ அனுப்பிய E Mail அது. வழக்கமான நலம் விசாரிப்புகள் ஏதுமின்றி, இரண்டே வரிகளில் இருந்தது .


18 DUCKS WILL SAIL AND REACH YOU IN A WEEK. 4 FOR W/O SHAHJAHAN ON THE EAST COAST. 5 FOR PEACOCK TEMPLE. 9 FOR LORD NEAR THE NARROW LANES ON BEACH. ROSES KEPT UNDER FLYING TRAIN. LET'S REPEAT WEST COAST.
REGARDS,
INDIAN FRIEND


பார்பதற்கு ஏதோ , விளையாட்டான விடுகதை போல இருந்தாலும், உள்ளே ஏதோ "உள்குத்து" இருப்பது போல தோன்றவே, மீண்டும் ஒருமுறை கூர்ந்து வாசிக்கலானேன்.



போன வாரம் படித்த "Basics of Cryptology" யும் , எனது சிறு மூளையும் கொஞ்சம் செயல் படத் தொடங்கின. என்னுடைய ஆராய்ச்சியின் வாயிலாக, அந்த E மெயில் ஐ , மொழி மாற்றம் (!) செய்த போது கிடைத்த செய்தி , எனக்கு பேதி வருவது போன்று ஒரு உணர்வை உண்டாக்கியதில் ஆச்சர்யமில்லை !


18 TERRORISTS ARE BEING SENT. 4 WILL SEIZE THE TAJ COROMANDEL HOTEL (W/O
SHAHJAHAN = TAJ; EAST COAST = COROMANDEL). 5 WILL SEIZE THE MYLAPORE TEMPLE  (PEACOCK TEMPLE). 9 WILL SEIZE THE SANTHOME CHURCH (LORD NEAR THE NARROW ROAD OF SANTHOME) .

!!!!!!!!!!!!!????????????!!!!!!!!!!!!!!!!!!!!



" பொறுத்தது போதும் - பொங்கிஎழு " என்று நானே சொல்லிக் கொண்டு , இதன் அவசரத்தை உணர்ந்தவனாய், அருகிலிருக்கும் காவல் நிலையத்தை நோக்கி, நடக்க , இல்லை, ஓட ஆரம்பித்தேன். என் மனதுக்குள், "வேட்டை ஆரம்பமாயிடுச்சி டோய் " என்று தோன்றியதை வெளியில் சொல்லாமல், அப்போதுதான் ரோந்திலிருந்து வந்திருந்த இன்ஸ்பெக்டரை அணுகினேன். நடந்த எல்லாத்தையும் கேட்டு , பின்பு ஒரு கான்ஸ்டபிளை என்னுடன் அனுப்பி, அந்த புத்தகக் கடைக் காரரிடம் விசாரிக்கச் சொன்னார். போலீசுடன் என்னைப் பார்த்த அவர், சற்றே பயந்தது போல நடித்து , அந்த புத்தகம் எங்கிருந்து வந்ததென்பதை கூறினார். அந்த இடத்திற்கு நங்கள் மூவரும் போன போது ,மணி மதியம் 12 . நங்கள் சென்று சேர்ந்த இடம் , ஒரு குடிசை ! நானும், கடைக் காரரும் கொஞ்சம் தள்ளி நிற்க, கான்ஸ்டபில் மாட்டும் குடிசையை அணுகி, கட்டப் பட்டிருந்த திரையை விலக்கி, உள்ளே எட்டிப் பார்த்தார். திரும்பியவரின் முகத்தில், ஆயிரம் அதிர்ச்சி அலைகள் !



கான்ஸ்டபில் மெதுவாக எங்கள் காதருகே வந்து பேசினார் - "சார் , பிரச்னை வேற மாதிரிப் போகுது சார் ! " .அவர் எங்கள் இருவரையும் இங்கேயே இருக்கச் சொல்லி விட்டு , அவசரமாக உயரதிகாரிகளுக்கு சொல்வதற்காக விரைந்தார். எங்களுக்கோ , பயம்.சரியாக 40 நிமிடங்கள் கழித்து , ஒரு TATA SUMO வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஆறு பேரில், ஒருவர் எங்களுடன் வந்த கான்ஸ்டபில் ! மற்றவர்களும் போலீஸ்தான் என்பதை புரிந்து கொள்வது எனக்கு கடினமானதாக இல்லை! அவர்கள் அந்த குடிசையை சூழ்ந்து கொண்டார்கள். அந்த கான்ஸ்டபில் என்னருகே வந்து "சார், நாம ( ! ) ஒரு பெரிய OPERATION ல இருக்கோம். எங்கயும் போயிடாதீங்க - கமிஷனர் உங்களை பார்க்கணும்னு சொல்லியிருக்கார் ! " என்று முனகி விட்டுப் போனார்.




எனக்கு ஆபரேசன் னாலே அலர்ஜி. அவர்கள் அந்த குடிசையை நோக்கி சரமாரியாக சுட்டதில், ஐந்து நிமிடங்கள் போர்க்களத்தில் இருப்பது போன்று தோன்றியது எனக்கு. (இந்து வரை போரை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் என்பது வேறு விஷயம் !) . கந்தலாகிப் போன குடிசைகளுக்கு இடையில் , ஏராளமான துப்பாக்கிகள் , வெடிகுண்டுகள் இருந்தன. இரண்டு வாலிபர்கள் இறந்து கிடந்தார்கள். சம்பவ இடத்திலிருந்து , காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு என்னையும் கமிஷனரோடு ஏற்றிக் கொண்டு சென்றார்கள், அங்கே பத்திரிக்கை நிருபர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செய்தி சேனல் காரர்கள் , என்னுடைய பேட்டியையும் LIVE ஆக ஒளிபரப்பினார்கள் !



எல்லாம் முடிந்து ,நான் என் வீட்டிற்கு போகும் போது மணி - மதியம் 3 ! உள்ளே நுழையும் போதே, மதன் "அப்பா ! டிவி...." என்று என் காலைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான். "18 பேர் கொண்ட தீவிரவாதக் கும்பல் கடலூர் அருகே படகுடன் பிடிபட்டனர் . அவர்கள் திட்டமிருந்த மூன்று தாக்குதல் சதிகள் , ஒரு IT ENGINEER இன் சமயோசித நடவடிக்கையால் முறியடிப்பு !!! ". மதனை தூக்கி வைத்துக் கொண்டு , என்னுடைய பேட்டியை டிவி யில் பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து என் மனைவி என்னையும் டிவி யையும் மாற்றி மாற்றி முறைத்துக் கொண்டே கூறினாள் -



"நான் சொல்ற எதையுமே கேக்காதீங்க - கொண்டு போன வெறும் பையோட வந்திருக்கீங்க ?! நானும் மதனும், மதியம் BREAD தான் சாப்டோம் !!"



என் அப்பா அடிக்கடி சொல்லுவார் - " எந்த புருஷனும் பொண்டாட்டிக்கு ஹீரோ இல்லை " னு !! நீங்க என்ன சொல்றீங்க ?!?!


பின்குறிப்பு :
இது எனக்கு மெயில் - இல் நண்பன் அனுப்பியதாகும்.
என்னால் முடிந்த அளவுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறேன்.வேறு யாரவது மொழி பெயர்க்க ஆசைப் பட்டால், அந்த ஆங்கிலக் கதையையும் பதிவிடுகிறேன் அல்லது மின்னஞ்சல் செய்கிறேன்.

2 comments:

  1. கருத்துச் சிதறலுக்கு வந்தமைக்கு நன்றி..
    சிறுகதை என்றே தெரியாமல் படித்தேன்...
    உங்களுக்கு தான் மனைவியும் குழந்தையும் இருப்பதாக நினைத்தேன்..
    துப்பறியும் அளவுக்கு போன பிறகு தான் சிறுகதை போலும் என உரைத்தது..
    கதை நன்றாக இருந்தது.. மனைவிக்கு ஹீரோ வாக இருப்பது கடினமானது தான்...

    ReplyDelete
  2. @நாடோடித்தோழன்

    மறுமொழிக்கு நன்றி நண்பரே !
    எதோ ஓரளவிற்காவது சஸ்பென்ஸ் வைக்க முடியுமா என்ற ஒரு அச்சத்துடனே இதை எழுதினேன்.
    ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறான் என நினைக்கிறேன்.
    நன்றி !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...