Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Saturday, January 1, 2011

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 2

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !


=================================================================================
"அந்த ஹோட்டல்ல, 'இன்றைய ஸ்பெசல்' னு போட்டு , 'காமன் வெல்த் தோசை , ஸ்பெக்ட்ரம் தோசை' ன்னு போட்டிருக்காங்களே ?! அப்படின்னா என்ன சார் ?!"

"காமன் வெல்த் தோசைன்னா 4 பேர் சாப்பிடலாம் , ஸ்பெக்ட்ரம் தோசைன்னா 40 பேர் சாப்பிடலாம் !"

"அங்க கேத்தன் தேசாய் தோசை கிடைக்குமா ?!"

"அது என்ன தோசை சார் ?!"

"நான் ஒருத்தன் மட்டும் தான் சாப்பிடப் போறேன் !"

                              நன்றி - புகைப்பட உதவி : http://www.commonwealthgame2010.com/
=================================================================================
"தலைவர் ஏன் ரொம்ப கோவமா இருக்கார் ?!"

"அவங்க வீட்டுக் காரம்மா வந்து, 'ஏங்க , 3G ஸ்பெக்ட்ரம் எப்போ  ஏலம் விடுவீங்க' ன்னு கேட்டுட்டுப் போறாங்க !"

=================================================================================
  "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"


" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!" 

'அதுக்கு இளவரசர் என்ன சொன்னார் ?!'

" 'அது என்ன அவ்ளோ காஸ்ட்லியா தந்தையே ?!' ன்னு கேட்கிறார்  ''

                                       நன்றி - புகைப்பட உதவி : http://www.freshplaza.com

=================================================================================
 "தலைவர்கிட்ட , 'குழந்தைக்கு, வாயில வர்ற மாதிரி பெரு வைங்க ' ன்னு சொன்னது தப்பாப் போச்சு !"

"ஏன் ?! என்ன ஆச்சு ?!"

" 'ஸ்பெக்ட்ரம்' னு பேர் வெச்சுட்டார். கேட்டா , 'இப்போ அதுதான் எல்லோர் வாயிலையும் வர்ற வார்த்தை  ' னு  சொல்றார் !"

=================================================================================
"தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார் !" 

"ஏன் அப்படி சொல்றே ?!"

"எதிர்க் கட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போல , தனக்கு 'இன்ஜினியர்' பட்டம் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுறார் ! "

=================================================================================

Friday, December 24, 2010

நேயர்கள் இனி கேட்கலாம்... செய்திச் சுருக்கம் !

எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.


                             நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com

பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் அவருக்கு.எப்போதும் கையில் ஒரு TRANSISTOR வைத்திருப்பார். மெதுவாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த TRANSISTOR  தான் அவரின் பெரும்பாலான நேரங்களில் துணையாக இருக்கும் - பாட்டி இறந்த பின்பு !கூடவே ஒரு பெரிய ரேடியோவும் வைத்திருப்பார். செய்திகள் வரும் நேரங்களில் ,அதனை TUNE செய்வது தான் "சக" பேரப்பிள்ளைகளின் வேலை. எல்லா அலைவரிசைகளிலும் எந்தெந்த நேரங்களில் செய்திகள் வரும் என்பதை மனப் பாடமாக தெரிந்து வைத்திருந்தார் .




                                           நன்றி - புகைப்பட உதவி  : www.jamthechannel.com


அதனை கேட்டுக் கொண்டே தூங்கியும் விடுவார். "சரி தூங்கி விட்டாரே" , என்றெண்ணி ரேடியோவை OFF செய்தால், உடனே விழித்துக் கொள்வார் ! பல முதியவர்களின் உற்ற தோழனாய் இருந்து கொண்டிருந்தது வானொலிதான். அதனுடனான நெருக்கத்தை, அவர்கள் தொலைக் காட்சியுடன் கொண்டிருக்கவில்லை !


என் சிறுவயதில், வானொலியில் திரைப் படங்களை வசனத் தொகுப்பாக  ஒலி பரப்புவார்கள்.இப்போதும், "தெய்வ மகன்" படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம், அதன் வசனத் தொகுப்பைக் கேட்ட அந்த மாலைப் பொழுது , மனதில் மீள் பதிவாகிறது ! இப்போதெல்லாம் , வானொலி என்றாலே FM ஞாபகம் தான் வருகிறது !கொஞ்ச நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


                                           நன்றி - புகைப்பட உதவி : www.blog.emman.in

சென்னை வந்த புதிதில் , FM கேட்பது என்பது புதிய அனுபவத்தைக் தரக்  கூடியதாய் இருந்தது. அப்போதெல்லாம் , தனியார் நிறுவன FM களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அரசு வானொலியின் ஒரு பிரிவான FM ரெயின்போ 101 .4 தான் எனது விருப்பம் ! தொகுப்பாளர்கள் , ஏதோ நம் அண்டை வீட்டுக் காரர்கள்  போல் உணரவைக்கிறார்கள் ! மணிக்கொரு முறை செய்திச் சுருக்கம் , அடிக்கடி பழைய பாடல்கள் என நெருக்கமாயிருக்கிறது ! 105 .6 பண்பலை, மாலை நேரங்களில் நல்ல நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள் . 102 .3 FM கோல்டில் , விரிவான செய்திகள் கேட்கலாம். பணி முடிந்து, கூட்டமில்லா மாநகரப் பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்தால், அந்த பயணத்தில் நிச்சய தோழன் 101.4 FM ரெயின்போ தான் !


காலப் போக்கில் , "MODERN ஆக்குகிறேன்" என்ற பெயரில் இது போன்ற வானொலி சேவைகளின் பழமையை மாற்றாமலிருக்க வேண்டும் ! எங்கள் வீட்டில் பழைய CASSET கள் நிறைய உண்டு ! ஆனால், 'பல' முறை பழுது பார்த்தும் , மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டேஇருந்தது ! சரி ஒரு புது TAPE ரெகார்டர் வாங்கலாமென்று, ஒரு 15 கடைகளில் ஏறி இறங்கியிருப்பேன்  ! எங்குமே கிடைக்கவில்லை !

                                              நன்றி - புகைப்பட உதவி: www.sony.lv


ஒருமுறை, என்  தந்தை, "உங்களைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் , ஏதாவது வாங்கி வர வேண்டுமா" என்று தாத்தாவை கேட்டதற்கு - "ஒரு TRANSISTOR  மட்டும் வாங்கிட்டு வாடா !" என்றார். சில வருடங்களில் தாத்தா  இறந்தும் விட்டார் ! அவர் வைத்திருந்த இரண்டு TRANSISTOR களும், ஒரு பெரிய ரேடியோவும் பழுதாகிப் போயிருந்தன ! இப்போது அந்த வீட்டில் யாரும் வானொலி கேட்பதில்லை. அதனைப் பழுது பார்க்க, யாரும் விரும்புவதுமில்லை, யாருக்கும் நேரமுமில்லை ! ஆனால், வானொலியானது, தன் அலைகளை காற்றில் பறக்கவிட்ட படியேதானிருக்கிறது , அதனைக் கேட்பவர்கள்தான் குறைந்து விட்டார்கள் !

Saturday, December 18, 2010

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !
 
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !

                                         நன்றி - புகைப்பட உதவி : www.serpholicmedia.com

ஆனால் அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் இல்லையே ?! அது இல்லாட்டி என்ன , எப்படியும் தூது விட புறா வாங்கித் தானே ஆகணும் ?!

=====================================================================================

"மந்திரி தான் புறா விற்றதில் எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறாரா ?"

"ஆமாம், தான் செய்த அனைத்தும் மன்னருக்கு தெரிவித்து விட்டுதான் செய்ததாக சொல்கிறார் !"

=====================================================================================

"மந்திரி , தன் பதவியை இராஜினாமா செய்து விட்டாராமே ?!"

"ஆமாம் ."

"ஆனால், கடந்த மாதம் , தான் ஊழலே செய்ய வில்லை என்று சொன்னாரே ?!"

"ம்ம்... கேட்டால், 'அது போனா மாசம், இது இந்த மாசம் ' என்கிறார் !"

=====================================================================================

புறா விற்றதில் , இதற்கு முன்னாள் இருந்த மந்திரிகள் என்ன வழிமுறைகள் பின்பற்றினார்களோ , அந்த வழி முறைகளைத்தான் நானும் பின் பற்றினேன் என்பதை அவையோருக்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் !

=====================================================================================

                                    நன்றி - புகைப்பட உதவி :  http://oratorgreat.blogspot.com/

" மன்னர் ஏன் திடீரென்று செல் போன் கனெக்ஷனை துண்டித்து விட்டு, 200 தீப்பெட்டிகளும், நூலும் ஆர்டர் செய்துள்ளார் ?! "

"செல் போனில் பேசினால் ஒட்டுக் கேட்கிறார்களாம் ! அதனால், இனிமேல் தீப்பெட்டித் தொலை பேசி மூலம் தான் பேசுவாராம் !"

 =====================================================================================
 "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"

" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!"

Saturday, November 27, 2010

ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும். இது  நடந்து.
வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !


                                    நன்றி - புகைப்பட உதவி : www.thehindubusinessline.com

இவ்வளவு நாட்களாக, ஒரே பேருந்தில் (வழித் தடத்தில் ) சென்று வருவதால், சக பயணிகள் நன்றாகவே அறிமுகமாகியிருந்தார்கள்.ஆனால் யாருடனும் பேசிக் கொண்டதில்லை ! வழிமேல் விழிவைத்து காத்திக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரியவர் என்னருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக என்னுடனான உரையாடலை ஆரம்பித்தார், என் பதிலை எதிர்பார்க்கமலேயே !

**********************************************************************************************

"நீங்க இந்த ஊருதானா தம்பி ?"

".............."

"எங்க வேல  பாக்குறீங்க ?"

".............."

 "எனக்கு கன்னியாகுமரி பக்கங்க !"

 ".............."

**********************************************************************************************

"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு  வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று  கொண்டிருந்தேன்.

**********************************************************************************************

"எனக்கு நாலு பசங்க தம்பி..."


".............."

"யாருமே எங்களை கவனிக்கல தம்பி ..."


".............."

"சரி, அவனுங்களை ஏன் நம்பணும்னு , கெளம்பி சென்னை வந்துட்டேன் - எதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு."


" ?!?!?!?! "

"என் பொஞ்சாதி வேற ஒடம்புக்கு முடியாம ஊர்ல கெடக்கா தம்பி..."


"ம்ம்ம்ம்...."


"ஆனா, வயசாயிடுச்சேன்னு இந்த கெழவனுக்கு யாரும் வேல தர மாட்டேங்கறாங்க தம்பி..."


"ஓ....!"


"இப்போ திரும்பி ஊருக்கே போய்டலாமுன்னு தோணுது..."


"ம்ம்ம்..."

"ஆனா கையில சுத்தமா காசு இல்ல தம்பி - பஸ்ல போனா கொறஞ்சது 500  ரூபா ஆகும். ஆனா, ECR ல நின்னு எதாவது லாரில ஏறி 100 ரூபா கொடுத்தா ஊர்ல எறக்கி விட்டுருவாங்க ! கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி - ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !"


                                      நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com

**********************************************************************************************


சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.

எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .

ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50  ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது  ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.

"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"

ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக்  கொண்டேன் .

**********************************************************************************************

ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். இது நடந்து. 

என்னைப் போலோருவன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அதே பெரியவர் அவனருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக அவனுடனான உரையாடலை ஆரம்பித்தார், அவன் பதிலை எதிர்பார்க்கமலேயே !

"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "

நன்றி - புகைப்பட உதவி : www.oxheyworld.com


மீதியை படிக்க, அவன் வலைத்தளம் எழுதுகிறானா என அறிந்து கொள்ள வேண்டும்!

ஒருவேளை அவனுக்கும் ஆண்டவன் ரெண்டு மடங்கு படி அளந்திருக்கிறானோ என்னவோ ?!

Saturday, November 20, 2010

இனி என்(ண்) நம்பர் !

எல்லோர் எண்ணங்களிலும் சில எண்கள் நிழலாடிக் கொண்டுதானிருக்கின்றன ! அப்படி, சில பிரபலங்களின் எண்ணங்களில்  இருக்கும் எண்கள் என்னவாக இருக்கும் ? ஒரு கற்பனை ! " எதனால் அந்த எண்கள் ? " என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !


நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com

செல்வி .ஜெ.ஜெயலலிதா , திரு .ஆ.ராசா - 1700000000000 ( கரெக்டான்னு தெரியல !)

 
முதல்வர் கலைஞர் - 118 

கேப்டன் விஜயகாந்த் - 100

பிரதமர் மன்மோகன் சிங் - 2 (G ! )

திரு .சச்சின் டெண்டுல்கர் - 400

 
மருத்துவர் ராமதாஸ் -

தமிழ்நாடு - 2011


இந்தியா - 2020


 
ஒபாமா - 123

 

உங்களுக்கு  தெரிஞ்சு ஏதாவது MISS ஆகியிருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க !

Saturday, November 13, 2010

மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)



 நன்றி - புகைப்பட உதவி  : www.thehindu.com


பரபரக்கும் காலைப் பொழுது....

மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..

அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...

நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்

எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...

தன் மகனாகவோ, அண்ணனாகவோ , 

தந்தையாகவோ , கணவனாகவோ -

இருக்கக் கூடாதென...


நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்து

வெளிப்படும்  முகங்களைப் பார்க்கிறான்,

தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,

மகனாகவோ ,மனைவியாகவோ -

இருக்கக் கூடாதா என !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...